ஜெம் வீரமணி பாலியல் வழக்கு! எங்களையும் சீரழிச்சிட்டாரு! SIT முன் மேலும் 3 சிறுமிகள் கண்ணீர்!
விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற நபர்களின் பங்கு தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை: தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் குழுவிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெம் வீரமணி மீது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடையதாக கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணை குறித்தும் தற்போது போலீசார் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக முன்னர் வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கு! எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் தப்பிக்க முடியாது! அமைச்சர் ரமேஷ் உறுதி!
இதற்கிடையே, வழக்கின் முழு பின்னணியையும் விசாரிக்க 4 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழுவை தமிழக காவல்துறை அமைத்துள்ளது. ஐஜி தேன்மொழி தலைமையிலான இந்தக் குழுவில் இணை ஆணையர் திஷா மித்தல் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி, கீதாஞ்சலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வீரமணியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இந்த வழக்கு தொடர்பாக முக்கிய தகவல்கள் தெரிந்தவர்கள் SIT-யிடம் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 பேர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கில் புகார் அளித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற நபர்களின் பங்கு தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை கையாள்வதில் அலட்சியம் காட்டியதாக கூறப்படும் சில போலீஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வழக்கில் பணம் கைமாறியதாக வெளியாகும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் SIT விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் விசாரணையில் உறுதி செய்யப்படும் வரை அவற்றை நிரூபிக்கப்பட்ட உண்மைகளாக கருத முடியாது.
மேலும் புகார்கள் மற்றும் ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில், வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறார்களின் அடையாளங்களை பாதுகாப்பது தொடர்பாகவும் விசாரணை அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கு! மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்! - சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!!