நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம கும்பல்.. ரத்த வெள்ளத்தில் அலறித்துடித்த மனைவி.. இந்து முன்னணி நிர்வாகிக்கு அதிர்ச்சி..
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே இந்து முன்னணி நிர்வாகியின் மனைவி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை. பலத்த காயமடைந்த இந்து முன்னனி நிர்வாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூரை சேர்ந்தவர் ஜெகதீஷன் (வயது 38). இவர் இந்து முன்னணியின் நாமக்கல் மாவட்ட செயலாளராக கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி மனைவி கீதா (வயது 36), இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கோடை கால பள்ளி விடுமுறை காரணமாக இரு குழந்தைகளும் கீதாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் வழக்கம் போல் கணவன், மனைவி என இருவரும் வீட்டில் தூங்கி கொண்டியிருந்தனர்.
அப்போது நள்ளிரவு திடீரென ஜெகதீஷன் அலறல் சத்தம் கேட்டு உள்ளது. அக்கம் பக்கத்தினர் என்னமோ ஏதோ என்று விரைந்து வந்து பார்த்து உள்ளனர். அப்போது வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் ஜெகதீஷன் கை, கால், தலையில் வெட்டப்பட்டு கிடந்தார். அருகில் அவரது மனைவி கீதா தலையில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.
உடனே இது குறித்து அக்கம் பக்கத்தினர் மூலம் பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நாமக்கல் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன், டி.எஸ்.பி சங்கீதா மற்றும் போலீசார் பலத்த காயமடைந்த ஜெகதீசனை மீட்டனர். அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனை சவகிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை நடந்தது.
இதையும் படிங்க: போலீஸ்னா என்ன இதுவா? லேடி ஏட்டுக்கு அரிவாள் வெட்டு.. கம்பத்தில் பரபரப்பு..!
இதனை அடுத்து சிகிச்சை பெற்று வரும் ஜெகதீஷனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வீட்டில் ஜெகதீஷன் கீதா தம்பதி தூங்கி கொண்டிருந்த போது, நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது மனைவி கீதா சென்று கதவை திறந்து உள்ளார். அப்போது அங்கிருந்த மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதனால் மனைவி கீதா அலறி உள்ளார்.
மனைவி கீதாவின் அலறல் சத்தம் கேட்ட ஜெகதீஷன், அங்கு சென்று மர்ம நபர்களை தடுக்க முயறிதுள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள் தடுக்க முயன்ற தன்னையும் தாக்கி வெட்டியதாகவும் ஜெகதீஷன் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணங்களால் இருவரும் வெட்டப்பட்டார்களா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து முன்னணி நிர்வாகியின் மனைவி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் இரு தரப்பினர் இடையே மோதல் - 5 பேருக்கு அரிவாள் வெட்டு!