கணவனை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கியதாக நாடகம்? கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி உட்பட 4 பேருக்கு ஆயுள்!
நால்வருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.45 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி: கணவனை கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடிய வழக்கில், மனைவி மற்றும் அவரது காதலன் உள்ளிட்ட நால்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சூர் அருகே கொல்ரூர் பகுதியைச் சேர்ந்தவர் சோனியா, 32. இவருக்கும் போச்சம்பள்ளி அருகே ஜம்புகுட்டப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராஜலிங்கத்துக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
திருமணத்துக்குப் பிறகு, சோனியாவுக்கும் அவரது கணவரின் உறவினர் வட்டத்தில் இருந்த சிவக்குமாருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அது காதல் உறவாக மாறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த உறவை ராஜலிங்கம் கண்டித்ததால், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி... காலி மதுபாட்டிலை திருப்பி கொடுக்கும்போது நடந்த விபரீதம்...!
இதையடுத்து ராஜலிங்கத்தை கொலை செய்ய சோனியாவும் சிவக்குமாரும் திட்டமிட்டதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி, சிவக்குமார் மற்றும் கூலிப்படையை சேர்ந்ததாக கூறப்படும் மூவரின் உதவியுடன் ராஜலிங்கம் தாக்கி கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கொலை நடந்த பின்னர், ராஜலிங்கம் தற்கொலை செய்து கொண்டது போல் சம்பவத்தை மாற்ற முயற்சி செய்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராஜலிங்கத்தின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போச்சம்பள்ளி போலீசார் சோனியா, சிவக்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சுமார் எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நேற்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜசிம்மவர்மன், குற்றம் நிரூபிக்கப்பட்ட நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார்.
மேலும், கொலைக்கான தடயங்களை மறைக்க முயன்ற குற்றத்துக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், கூட்டுச்சதி குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நால்வருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.45 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: திருமணம் செய்து வைக்க கோரி தகராறு செய்த மகன் கொலை?! தாய், பாட்டி கைது! கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!