×
 

எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது!! 1000 ஆண்டுகளுக்கு உத்வேகமாகத் திகழும் - மோடி பெருமிதம்!

எந்த சக்தியாலும் இந்தியாவைப் பணிய வைக்க முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சோமநாதர் கோயிலின் 75வது ஆண்டு மகோத்சவ விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஆற்றிய உரை தேசிய அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. “உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது” என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

சோமநாதர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் தேசிய நலனே எப்போதும் முதன்மையானது என்று வலியுறுத்தினார். உலக நாடுகளின் அழுத்தங்கள் இருந்தபோதிலும் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த வரலாற்றை நினைவுபடுத்திய அவர், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் நடந்த அணு ஆயுத சோதனைகளை குறிப்பிட்டார்.

1998ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி இந்தியா வெற்றிகரமாக அணு ஆயுத சோதனை நடத்தியது நாட்டின் தன்னம்பிக்கையை உலகிற்கு காட்டிய நாள் என்றும் அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் சுயமரியாதை குறித்து எந்த சமரசமும் செய்யப்படாது என்றும் பிரதமர் கூறினார்.

இதையும் படிங்க: புத்த பூர்ணிமா கொண்டாட்டம்! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சோமநாதர் கோயில் குறித்து பேசிய மோடி, இந்த ஆலயம் பல முறை தாக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் எழுந்து நின்றது இந்தியாவின் ஆன்மீக வலிமைக்கு எடுத்துக்காட்டு என்றார். “இது ஒரு சாதாரண விழா அல்ல; அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான இந்தியாவின் உத்வேக விழா” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பாரம்பரியமும் நவீன வளர்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்தே பயணிக்கின்றன என்று தெரிவித்த பிரதமர், சுதந்திர இந்தியாவின் ஆன்மாவை உலகிற்கு அறிவித்த முக்கிய நிகழ்வுகளில் சோமநாதர் கோயில் கும்பாபிஷேகமும் ஒன்று என்றார்.

இந்த விழாவில் சோமநாதர் கோயிலின் பாரம்பரியம் மற்றும் ஆன்மீக பெருமையை எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.

முன்னதாக சோமநாதர் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “சோமநாதரின் புனித தலத்திற்கு வந்தது தெய்வீக அனுபவத்தை அளித்தது” என்று குறிப்பிட்டார்.

 

இதையும் படிங்க: உத்தரபிரதேசத்திற்கு எதிராக செயல்படுகிறது திமுக!! அதிக தொகுதிகள் கிடைக்கக்கூடாது என எதிர்ப்பதாக மோடி குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share