காதலை கைவிட்டதால் ஆத்திரம்! வீடு புகுந்து தாய், மகள் வெட்டிக்கொலை! இன்ஸ்டா காதலன் கொடூரம்! பல்லடத்தில் பயங்கரம்!
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது
திருப்பூர்: பல்லடம் அருகே வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் தாய், மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் மற்றும் ரகசிய திருமணம் தொடர்பான பிரச்னையில் இந்த கொலை நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பல்லடம் அருகே பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி தனலட்சுமி. தம்பதி இருவரும் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது 21 வயது மகள் பூவரசி, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
சம்பவம் நடந்த காலை பழனிச்சாமி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனலட்சுமியும் பூவரசியும் இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அரிவாளால் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தப்பிச் செல்ல முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான அக்சயன் என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், பூவரசியும் அக்சயனும் சுமார் 5 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் சில மாதங்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த திருமணம் பூவரசியின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததை தொடர்ந்து, அக்சயனுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என அவரது தாயார் தனலட்சுமி மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும், பூவரசியின் கழுத்தில் இருந்த தாலியையும் கழற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இதற்கிடையே பூவரசியை சந்திக்க திண்டுக்கல்லில் இருந்து பல்லடம் வந்த அக்சயன், கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பழனிச்சாமி வேலைக்குச் சென்றதை அறிந்து பூவரசியின் வீட்டுக்குச் சென்ற அவர், அவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தனலட்சுமியிடம் கேட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதற்கு அவர் மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அக்சயன், தனலட்சுமியையும் பூவரசியையும் அரிவாளால் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அக்சயனை கைது செய்த பல்லடம் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலைக்கான முழுமையான காரணம், முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டுக்குள் புகுந்து தாய், மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பச்சாபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நீதிபதியின் போட்டோ வைத்து சுடுகாட்டில் ‘சூனியம்’! ஜாமினுக்காக ‘மாந்திரீகம்’! சிக்கியது அதிர்ச்சி ஆதாரங்கள்!