×
 

பர்சனல் செகரட்டரி வேலைக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்... ஆசை வார்த்தையில் சிக்கிய இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

வேலை தருவதாக கூறி, கேரள மாநில பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த பெண்ணிடம் பணம் பெற்று, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் தொழிலதிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தெரிவித்த தகவலின்படி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது, புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் பொறியியல் நிறுவனம் நடத்தி வரும் கடலூர் மாவட்டம் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் என்பவரை தொடர்புகொண்டு வேலை கேட்டதாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணிடம், தனது நிறுவனத்தில் தனிச் செயலாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என்றும் லட்சுமிகாந்தன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி, கடந்த மே 20-ஆம் தேதி அந்தப் பெண் புதுச்சேரிக்கு வந்துள்ளார். பின்னர், கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் அவரை தங்க வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பெண்ணின் மார்பை கசக்குவதோ! ஆடையை அவிழ்ப்பதோ கற்பழிப்பு முயற்சி ஆகாது! பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

இதற்கிடையில், தனக்கு அவசரமாக ரூ.10 லட்சம் தேவைப்படுவதாகக் கூறி, அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்றதாகவும், பின்னர் கொலை மிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், லட்சுமிகாந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக கூடுதல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், பண மோசடி உள்ளிட்ட பிற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வேலை வாய்ப்பு என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வேலை தேடுபவர்கள் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்து, முன்பணம் அல்லது பணம் கேட்கும் நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேர் கொலை! சிறுமி பாலியல் வன்கொடுமை! போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெறிச்செயல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share