ஆந்திராவில் நர்சிங் மாணவி விபரீத முடிவு!! ஒரே மாதத்தில் 2 மாணவிகள் மரணத்தால் சர்ச்சை!
அக்.31ஆம் தேதி முதலாமாண்டு மாணவி ஒருவர் தூக்க மாத்திரை உட்கொண்டு இறந்த நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டு மாணவிகள் உயிரை மாய்த்துக்கொண்டது அங்குள்ள சக மாணவிகள் மத்தியிலும், ஊழியர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில், இரண்டாம் ஆண்டு மாணவி பல்லவி (19) நேற்று முன்தினம் (நவம்பர் 20) மாலை நான்காவது மாடியிலிருந்து குதித்து உயிரை முடித்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
இதே கல்லூரியில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் அதிக அளவு தூக்க மாத்திரை உட்கொண்டு இறந்திருந்த நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டாவது மாணவி உயிரை மாய்த்துக்கொண்டது கல்லூரி மாணவிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குப்பத்தில் உள்ள பி.இ.எஸ் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் பல்லவி. போலீசார் தெரிவித்ததாவது: “மன உளைச்சல் காரணமாக பல்லவி இந்த முடிவை எடுத்திருக்கலாம். விடுதியின் நான்காவது மாடியிலிருந்து திடீரென குதித்தார். சக மாணவிகளும் ஊழியர்களும் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை” என்று கூறினர்.
இதையும் படிங்க: திமுக-காரங்க கிட்ட இருந்து பெண்களை காப்பாத்தனும்... முதல்வரை பந்தாடிய EPS...!
பல்லவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகத்தின் மீது கடும் குற்றம் சாட்டியுள்ளனர். “மகளுக்கு தொடர்ந்து மன அழுத்தம் கொடுத்ததால்தான் இப்படி நடந்தது” என்று கதறி அழுதனர். கல்லூரி நிர்வாகம் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி இதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் அதிக அளவு தூக்க மாத்திரை உட்கொண்டு உயிரிழந்தது இப்போது மீண்டும் நினைவுக்கு வருகிறது. ஒரு மாத இடைவெளியில் இரண்டு மாணவிகள் உயிரை மாய்த்துக்கொண்டது விடுதியில் பயங்கர அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் சித்தூர் மாவட்டத்திலேயே இரு பொறியியல் மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதில் ஒருவர் இறந்தார், மற்றொருவர் சிகிச்சையில் உள்ளார். கடந்த வாரம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒரு பொறியியல் மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஆந்திராவில் கடந்த சில மாதங்களாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி நிர்வாகங்கள் மாணவிகளுக்கு உரிய கவுன்சலிங் மற்றும் மனநல உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதையும் படிங்க: அதிக சம்பளம் என ஆசையை தூண்டி! 'வாட்ஸாப், டெலிகிராம்' மூலம் மோசடி! மியான்மரில் சிக்கித் தவித்த இந்தியர்கள்!!