×
 

பாஜக பொதுச்செயலாளர் காரை அடித்து நொறுக்கிய போதை கும்பல்! கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

கார் டிரைவர் ஸ்டாலினை கொடூரமாக தாக்கினர். கம்பு, கட்டையால் அடித்தம், கல் எறிந்தும் காரை நொறுக்கினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் சென்ற சொகுசு கார் மீது மது போதையில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே திருச்சேறை பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பாஜக தலைவர் செல்வராஜ் தனது சொகுசு காரில் திருவாரூரில் இருந்து திரும்பி கும்பகோணம் நோக்கி வந்துகொண்டிருந்தார். திருச்சேறை அருகே வந்தபோது, மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் காரை மோதுவது போல் தடுத்து நிறுத்தியது. உடனே காரை ஓரமாக நிறுத்தி, அவர்களை செல்லுமாறு செல்வராஜ் கூறியதாக தெரியவருகிறது.

ஆனால் மது போதையில் இருந்த நபர்கள் காரில் பாஜக கொடி இருந்ததை பார்த்து, “பாஜக கொடி கட்டியிருந்தால் கேள்வி கேட்பியா?” என்று கோபமடைந்தனர். கைகளில் இருந்த கம்பு, கட்டை, கல் உள்ளிட்டவற்றால் காரை கொடூரமாக அடித்து நொறுக்கினர். காரின் கண்ணாடிகள் உடைந்து, உடல் பகுதிகள் சேதமடைந்தன.

இதையும் படிங்க: ‛எந்த ஊரு நாய்டா நீ’ வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல்! கடையை அடித்து நொறுக்கிய போலீஸ்!

மேலும் செல்வராஜின் சட்டையை பிடித்து அடிக்க முயன்றனர். அப்போது கார் டிரைவர் ஸ்டாலின், உடன் வந்த உறவினர்களான மனோஜ், கௌதம் ஆகியோர் தடுத்தனர். இதனால் கோபமடைந்த கும்பல் அவர்களையும் கல், கட்டையால் கடுமையாக தாக்கியது. மூவரும் பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடம் மாறியது.

இதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், தாக்குதல்காரர்கள் தப்பி ஓடினர். படுகாயம் அடைந்த மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் புகார் அளித்துள்ளார். பாஜகவினர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் அரசியல் காரணங்களால் நடந்ததா என்பது விசாரணையில் தெரியவரும்.

தமிழகத்தில் அரசியல் வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் மது போதையில் வன்முறை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வாய மூடுங்க!! ஏன் வரல!! அமைச்சர் காந்தியை கண்டித்த முதல்வர்!! சமாதானப்படுத்திய நேரு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share