குட் நியூஸ்! வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்? அமைச்சர் வினோத் சொன்ன முக்கிய அறிவிப்புகள்!
வேளாண் பட்ஜெட் தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் 2026–27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தொடங்குகிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை வேளாண்மை அமைச்சர் வினோத் தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான முன்னேற்பாடாக, வேளாண் பட்ஜெட் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது.
அமைச்சர் வினோத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன், ஶ்ரீநாத், ராஜலட்சுமி, கமலி, விஜய் பாலாஜி, ரஞ்சித் குமார், மதன் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், விவசாயிகள், முட்டை உற்பத்தியாளர்கள், கைத்தறித் துறையினர், வங்கி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் வினோத், மாநிலம் முழுவதும் ஏற்கனவே நான்கு மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். சென்னை தவிர பிற மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவசாயிகளின் கருத்துகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயாராகி வருவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: டூ வீலரில் வந்து தூர்வாரும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் என்.ஆனந்த்!! காரணம் தான் ஹைலைட்!
வரவிருக்கும் வேளாண் பட்ஜெட்டில் கால்நடை, மீன்வளம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்றும், விவசாயிகள் முன்வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் கவனமாக பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். மேலும், குளிர்சாதன கிடங்குகள் மேம்பாடு, நெல் சேகரிப்பு கிடங்குகளின் பராமரிப்பு, வேளாண் கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
விவசாய உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளின் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் நோக்கில் அரசு செயல்பட்டு வருவதாகவும், குறிப்பாக பெண் விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்கள் மற்றும் முன்னுரிமை நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் வினோத் கூறினார். இதனால், இந்த ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் மீது விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிகள் தளர்வு! மாறிய விதிமுறைகள்! முழு விவரம்!