×
 

தோல்வி பயத்தில் மாநில சுயாட்சி பேசும் ஸ்டாலின்.... தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், மாநில சுயாட்சி மற்றும் திமுகவின் கூட்டணிக் குழப்பங்கள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழ்நாடு எப்போதும் சிறந்த மாநிலம்தான், ஆனால் இப்போதைய திமுக ஆட்சிதான் மிக மோசமானது என அவர் சாடினார்.

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு என எதுவுமே இல்லை. குறிப்பாகக் கடைமடைப் பகுதியான தஞ்சாவூருக்குக் காவிரி நீரைக் கொண்டு வருவதற்கான எந்த முயற்சியும் பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை. அவசரநிலை (Emergency) காலத்தில் மாநிலக் கட்சிகளே இருக்கக்கூடாது என நினைத்த காங்கிரஸைக் கூட்டணியில் வைத்துக்கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது மாநில சுயாட்சி பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. தோல்வி பயத்தின் காரணமாகவே இப்போது அவர் இந்தப் பேச்சை எடுத்துள்ளார். 10.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு நிதி நிர்வாகம் சரியில்லை என மத்திய அரசைக் குறைகூறுவது முறையல்ல. உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கே அதிகாரம் கொடுக்காத ஸ்டாலின், மாநில சுயாட்சி பற்றிப் பேசுவதற்குத் தகுதியில்லை.

தமிழகத்தில் உள்ள கூட்டணிக்கே ஸ்டாலினால் சரியாகத் தலைமை தாங்க முடியவில்லை. மாணிக்கம் தாகூரைக் கூட அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை; இந்நிலையில் அவர் எப்படி அகில இந்திய கூட்டணிக்குத் தலைமை தாங்க முடியும். திருமாவளவன் பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்கிறார் (அதிகாரத்தில் பங்கு). எங்களை அடிமை கூட்டணி எனச் சொல்லும் அவர், வேங்கைவயல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை முதலில் பார்க்கட்டும்.

இதையும் படிங்க: பாஜக ஆட்சியில் மீனவர் உயிரிழப்பு இல்லை...! தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா அதிரடி பேச்சு!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏஐ (AI) மாநாட்டை நடத்தி உலக நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டு வரும் வேளையில், இங்கு ஆளும் கட்சி ஒரு கூட்டணிக் கூட அமைக்க முடியாமல் தடுமாறி வருவதாகத் தமிழிசை எள்ளி நகையாடினார். பாஜக கூட்டணி பலமாக இருப்பதாகவும், வரவிருக்கும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share