திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்? பசு நெய் பெயரில் பாமாயில்? சுக்ருதி புட்ஸ் உரிமையாளரை கைது செய்த ED!
கலப்படப் பொருட்களைப் பெறுவதற்கும், தனது தொழிற்சாலை வளாகத்தில் அவற்றைக் கொண்டு நெய் தயாரிப்பதற்கும் மங்களா உதவியதாக ED தெரிவித்துள்ளது.
திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நெய் கலப்பட வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சுக்ருதி புட்ஸ் நிறுவனத்தின் புரமோட்டர் கைலாஷ் சந்த் மங்களாவை செப்டம்பர் 17-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. பின்னர் அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள சிறப்பு பணமோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நெய் தொடர்பான மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த விசாரணை திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை அடிப்படையாகக் கொண்டது.
அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின்படி, ‘அக்மார்க் ஸ்பெஷல் கிரேடு பசு நெய்’ என்ற பெயரில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பொருளில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பாம் கெர்னல் ஆயில், பாமோலின் மற்றும் பல்வேறு ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. MG-90, மோனோகிளிசரைடுகள், Myvacet Soft 400, அசிட்டிக் அமில எஸ்டர் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்! இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு! பக்தர்கள் அவதி!
2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் TTD-க்கு சுமார் ரூ.230 கோடி மதிப்பிலான நெய் விநியோகம் தொடர்பாக முறைகேடுகள் நடந்ததாக ED குற்றம்சாட்டியுள்ளது. இதில், கைலாஷ் சந்த் மங்களா தொடர்புடைய நிறுவனத்தில் சுமார் ரூ.96 கோடி மதிப்பிலான கலப்பட நெய் தயாரிக்கப்பட்டதாக விசாரணை அமைப்பு கூறியுள்ளது.
மேலும், கலப்படப் பொருட்களைப் பெறுவதற்கும், தனது தொழிற்சாலை வளாகத்தில் அவற்றைக் கொண்டு நெய் தயாரிப்பதற்கும் மங்களா உதவியதாக ED தெரிவித்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மூலம் அந்தப் பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்ததாகவும், உண்மையான மூலப்பொருட்களை மறைக்கும் வகையில் போலியான கொள்முதல் மற்றும் விற்பனை பதிவுகள் பராமரிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே போலே பாபா ஆர்கானிக் டெய்ரி மில்க் நிறுவனத்தின் புரமோட்டர் மற்றும் இயக்குநரான விபின் ஜெயினையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தற்போது கைலாஷ் சந்த் மங்களா நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய பணப்பரிமாற்றங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கில் ED முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அடுத்தகட்ட விசாரணையில் மேலும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என் தங்கையை கொன்றவனை நானும் கொன்றுவிட்டேன்! 4 மாத கர்ப்பிணியை கொன்ற கணவனை வெட்டி சரித்த அண்ணன்!