இப்படியுமா பண்ணுவாங்க? மகள்களை கொன்ற வழக்கில் தாய்க்கு இரட்டை ஆயுள்! உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
உளுந்தூர்பேட்டை அருகே குடும்ப பிரச்சினையைத் தொடர்ந்து தனது இரு மகள்களுக்கும் விஷப் பொருள் கொடுத்து, தானும் தற்கொலைக்கு முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே குடும்ப பிரச்சினையைத் தொடர்ந்து தனது இரு மகள்களுக்கும் விஷப் பொருள் கொடுத்து, தானும் தற்கொலைக்கு முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள வடக்குறும்பூர் மன்மதன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு கவிபிரிஜா, ரித்திகா என இரு மகள்கள் இருந்தனர்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் குடும்ப பிரச்சினை காரணமாக பெருமாளுக்கும் ஜெயந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பெருமாள் தன்னை திட்டியதால் மனமுடைந்த ஜெயந்தி, தனது இரு மகள்களுக்கும் எலி பேஸ்ட் கொடுத்துவிட்டு, தானும் அதனை உட்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து! உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயம்!
இதையடுத்து மூவரும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இரு சிறுமிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஜெயந்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக வடக்குறும்பூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயந்தியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை கள்ளக்குறிச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்திக்கு இரு குற்றங்களுக்காக இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சையத் பரகத்துல்லா தீர்ப்பளித்தார்.
பெற்ற இரு மகள்களின் உயிரிழப்புக்கு காரணமானதாக தொடரப்பட்ட வழக்கில் தாய்க்கே இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கண்ணி வெடியில் சிக்கிய 7 வயது சிறுமி! பன்றியை பிடிக்க வைத்த பொறியால் நேர்ந்த விபரீதம்! கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி!