×
 

8 மாத கர்ப்பிணி மனைவியை வெட்டிக்கொன்று நாடகமாடிய குழந்தையின் சாட்சியால் வெளியான அதிர்ச்சி சம்பவம்!

உ.பியில் 8 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் குடிபோதையில் கொலை செய்த நிலையில் அவரை 5 வயது மகனினே போலீசில் சிக்கவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகோபா மாவட்டத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், கொலையை மறைக்க முயன்ற கணவனை, அவரது 5 வயது மகன் போலீசாரிடம் உண்மையை கூறியதன் மூலம் கைது செய்துள்ளனர்.

மகோபா மாவட்டம் பாஜ்ராரி கிராமத்தைச் சேர்ந்த ஹனீப் மன்சூரி என்பவர் மது அருந்தும் பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தப் பழக்கங்களால் தனது நிலத்தின் பெரும்பகுதியையும் ஏற்கனவே விற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை இரவு அதிக அளவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த ஹனீப்பை, அவரது மனைவி மனிஷா மது அருந்துவதை நிறுத்துமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ஹனீப், வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து 8 மாத கர்ப்பிணியான மனிஷாவை தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தலையிலும் உடலின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட கடுமையான காயங்களால் மனிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொடூரச் சம்பவத்தை அவர்களது 5 வயது மகனும், 2 வயது மகளும் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆற்றில் குளித்த சிறுவனை இழுத்துச் சென்ற முதலை! உறவினர் கண் முன்னே நடந்த சோகம்...

கொலைக்குப் பிறகு, சம்பவத்தை வேறு விதமாக காட்ட முயன்ற ஹனீப், தானே போலீசாருக்கு தகவல் அளித்து தவறான விளக்கம் அளித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் 5 வயது மகன், “என் அப்பாதான் அம்மாவை தாக்கினார்” என்று கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஹனீப்பிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மனிஷாவின் சகோதரர், திருமணத்திற்குப் பிறகே ஹனீப் அடிக்கடி மனைவியை சந்தேகித்து துன்புறுத்தி வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். ஹனீப்பின் தந்தையும், தனது மகன் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துவிட்டதாகவும், தாய் இழந்த இரண்டு பேரக் குழந்தைகளையும் தானே வளர்க்கப் போவதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கணவரை கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி! குளியலறையில் கிடைத்தது சடலம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share