×
 
☰

உசிலம்பட்டி டிராவல்ஸ் அதிபர் கொலையில் திடீர் திருப்பம்! கொலையாளிகளை பிடிக்க தனிப்படை!

அவர் சடலமாக கிடந்த இடத்தின் அருகே கார் காணப்படவில்லை. இதனால் அவரை கொலை செய்த மர்ம நபர்கள் உடலை வாய்க்காலில் வீசிவிட்டு காருடன் தப்பியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட 50 வயது நபர், உசிலம்பட்டியைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் என்பது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையில் அவரது கழுத்து எலும்புகள் உடைந்திருந்தது தெரியவந்ததை தொடர்ந்து, போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் முடுக்கன்துறை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்பாபு, பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில், இறந்தவரின் கழுத்து எலும்புகளில் பாதிப்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதனால் சந்தேக மரணம் வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீனிவாச நகர் முதல் தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், 50, என்பது தெரியவந்தது. அவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததுடன், வாடகை காரும் ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது மனைவி ரமாபிரபா. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

ஜெயச்சந்திரன் சத்தியமங்கலம் பகுதியில் வாடகைக்கு கார் ஓட்டுவதற்காக சென்றதாக அவரது மனைவி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் சடலமாக கிடந்த இடத்தின் அருகே கார் காணப்படவில்லை. இதனால் அவரை கொலை செய்த மர்ம நபர்கள் உடலை வாய்க்காலில் வீசிவிட்டு காருடன் தப்பியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலைக்கான காரணம் என்ன, முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: “உன் மகனையும் விடமாட்டோம்!” நள்ளிரவில் வீட்டை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு; பெண்ணுக்கு தீக்காயம்! 3 பேர் கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share