வேலூர்: 4 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்.. மேலும் சிக்கிய ஒருவர்.. போலீசார் அதிரடி..!!
குடியாத்தத்தில் 4 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் போலீசார் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் உள்ள பவள தெருவில் சாப்ட்வேர் இன்ஜினியர் தொழில் செய்பவர் வேணு. இவர் தனது 4 வயது மகன் யோகேஷை நேற்று மதியம் பள்ளியில் இருந்து மதிய உணவு இடைவெளியின் போது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இரு சக்கர வாகனத்தில் வந்த தந்தையும், மகனும் வீட்டிற்கு செல்ல முயன்றபோது, அங்கு காரில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிறுவனின் தந்தை முகத்தில் மிளகாய் பொடியை வீசி, குழந்தையை அவரது கண் எதிரே காரில் கடத்தியுள்ளனர்.
இதனைக்கண்டு பதறிப்போன தந்தை வேணு, கத்தி கூச்சலிட்ட நிலையில், கார் மின்னல் வேகத்தில் பறந்து சென்றது. இதனைத்தொடர்ந்து அவர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க, குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் உடனடியாக செயல்பட்டு அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து உஷார்படுத்தினார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் துணிகரம்.. மிளகாய்ப்பொடி தூவி சிறுவன் கடத்தல்.. பத்திரமாக மீட்ட போலீஸ்..!!
தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் ரோந்து பணி தீவிரபடுத்தப்பட்டு நான்கு திசையிலும் காவல்துறையினர் கார் சென்ற இடங்களை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் போலி பதிவு என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து குடியாத்தத்தில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவனை போலீசார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சிறுவன் கடத்தல் தொடர்பாக, பவளக்கார தெருவில் வேணுவின் வீட்டிற்கு அருகே வசிக்கும் பாலாஜி (27) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் பாலாஜி சொந்தமாக கார் வைத்து ஓட்டுநராகவும், அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக டிரைவரைகவும் பணியாற்றி வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு பாலாஜி ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் ரூ.8 லட்சம் வரை செலவானது. இதில் இன்சூரன்ஸ் மூலம் ரூ.4 லட்சம் கிடைத்துள்ளது மீதி பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது நண்பரான கார் டிரைவர் விக்கி (27) என்பவருடன் சேர்ந்து, வேணுவின் மகன் யோகேஷை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு பாலாஜிக்கு சொந்தமான காரில் கடத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விக்கியையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சொன்னதை செய்து காட்டிய ராகுல் காந்தி.. நனவானது குட்டி சிறுவனின் ஆசை..!!