×
 

சுவெந்து அதிகாரி உதவியாளர் மரணத்தில் கூலிப்படை தொடர்பு? தனிப்படை விசாரணை தீவிரம்!

மேற்கு வங்கத்தில், பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கூலிப்படையினருக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பா.ஜ., மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளர் சந்திரநாத் ராத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மத்தியகிராம் பகுதியில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சந்திரநாத் ராத்தை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தலை, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் உயிரிழந்தார். காரை ஓட்டிச் சென்ற டிரைவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய தாக்குதலாளர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பல்வேறு தனிப்படைகள் மூலம் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கொலையில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. திட்டமிட்டு அருகில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மேற்குவங்கத்தில் முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி!! மே 9ல் பதவிஏற்பு! மோடி சூசகமாக சொன்ன தகவல்!

சமீபத்திய சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பா.ஜ., பெரும் வெற்றி பெற்ற நிலையில், அரசியல் மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை தோற்கடித்த சுவேந்து அதிகாரியின் அணியில் இருந்த முக்கிய நபர் கொல்லப்பட்டதால் அரசியல் சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க பா.ஜ., தலைவர் சமிக் பட்டாசார்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இது சாதாரண குற்றச்சம்பவம் அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல் கொலை. பிரதமர் மோடியின் வருகைக்கு முன் அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம்,” என்று அவர் கூறினார். மேலும் மாநில கவர்னரை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பனிஹாட்டியில் பா.ஜ., நிர்வாகிகள் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நாங்கள் தோற்கவில்லை!! ராஜினாமா செய்ய மறுத்து அடம் பிடிக்கும் மம்தா பானர்ஜி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share