பலுசிஸ்தானில் பயங்கர துப்பாக்கிச் சூடு..!! 15 பாக். வீரர்கள், 92 பயங்கரவாதிகள் பரிதாப பலி..!!
பலுசிஸ்தானில் நடத்த துப்பாக்கிச் சூட்டில் 15 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 92 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் (ஜனவரி 31) நடைபெற்ற ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளில் 15 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், 92 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா, க்வாடர், கரான், நுஷ்கி, டர்பட் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தடை செய்யப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) இத்தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலைத் தாக்குதல்கள், துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இத்தாக்குதல்களால் 18 அப்பாவி பொதுமக்கள் (பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட) உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 40 மசூதிகளை இடிச்சிட்டாங்க!! குர்ஆனை எரிக்கிறாங்க! பாக்., மீது பலூச் தலைவர்கள் குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவான ISPR வெளியிட்ட அறிக்கையில், "பயங்கரவாதிகளின் தீய திட்டங்களை முறியடிக்கும் வகையில், பாதுகாப்புப் படைகள் துல்லியமாக செயல்பட்டன. நீண்ட நேரம் நீடித்த தீவிர சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் மூன்று தற்கொலைத் தாக்குதல்காரர்கள் உட்பட 92 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) பான்ஜ்கூர் மற்றும் ஹர்னை மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதால், கடந்த இரு நாட்களில் மொத்தம் 133 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக ISPR கூறியுள்ளது. இந்த நடவடிக்கைகளின்போது 15 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்திகரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பலுசிஸ்தான் மாகாணம் தசாப்தகாலமாக பிரிவினைவாதிகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) திட்டங்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இந்த சம்பவம் 2025ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்கள் 34% அதிகரித்துள்ளதாக Pak Institute for Peace Studies அறிக்கையுடன் தொடர்புடையதாக உள்ளது.
பாகிஸ்தான் அரசு இத்தாக்குதல்களை "இந்தியா ஆதரவு பயங்கரவாதிகள்" நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது. BLA இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகத் தொடரும் என பாகிஸ்தான் இராணுவம் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் கைகுலுக்கும் சீனா! இந்தியாவுக்கு தான் பேராபத்து! பலூச் தலைவர் அவசர கடிதம்!