அமெரிக்கா: கடலில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்..!! பரிதாபமாக பறிபோன 5 உயிர்..!!
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கால்வெஸ்டன் விரிகுடா அருகே ஏற்பட்ட விமான விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ கடற்படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானம் மருத்துவ உதவி பணியில் ஈடுபட்டிருந்தது. விமானத்தில் இருந்த எட்டு பேரில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காணாமல் போக, இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.
கிங் ஏர் ANX 1209 (பீச்கிராஃப்ட் மாடல்) என்ற விமானம், மெக்சிகோவிலிருந்து டெக்சாஸ் கால்வெஸ்டன் நகரில் உள்ள ஸ்ரைனர்ஸ் சில்ட்ரன்ஸ் மருத்துவமனைக்கு ஒரு இரண்டு வயது குழந்தையை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து சென்றது. குழந்தை தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த பயணம் மிச்சௌ மற்றும் மௌ அறக்கட்டளையுடன் இணைந்து மெக்சிகன் கடற்படையின் "பிளான் மரினா" திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்த அறக்கட்டளை தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவசர மருத்துவ போக்குவரத்து உதவி வழங்குகிறது.
இதையும் படிங்க: குடியுரிமை நோக்கத்துடன் விசா கேட்டால் விண்ணப்பங்கள் ரத்து! - அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!
உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, உறவினர்கள், பாதுகாப்புப்படை அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் அமெரிக்காவுக்கு பயணித்தனர். இதில் லெப்டினன்ட் A.N. P.A. விக்டர் ரஃபேல் பெரெஸ் ஹெர்னாண்டெஸ், லெப்டினன்ட் S.S.N. ஜுவான் இவான் சரகோசா ப்ளோரஸ், மரினெரோ A.N. E. Av. குவாடலூப் ப்ளோரஸ் பாரன்கோ (கடற்படை உறுப்பினர்கள்), ஃபெடரிகோ எஃப்ரைன் ரமிரெஸ் க்ரூஸ் (நோயாளி குழந்தை), ஜுவான் அல்போன்சோ அடேம் கோன்சலெஸ் (மருத்துவர் ஆகியோர் உயிரிழந்த நிலையில், லெப்டினன்ட் A.N. P.A. லூயிஸ் என்ரிக் காஸ்டிலோ டெர்ரோனெஸ் மாயமாகியுள்ளார். மேலும் ஜூலியா அராசெலிஸ் க்ரூஸ் வேரா மற்றும் மிரியம் டி ஜீசஸ் ரோசாஸ் மான்சில்லா ஆகியோர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து ஏற்பட்ட போது கனமான பனிமூட்டம் இருந்ததாக தெரிகிறது. பார்வைத்திறன் அரை மைலுக்கும் குறைவாக இருந்தது. இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் கால்வெஸ்டன் காஸ்வே பாலத்திற்கு அருகே விரிகுடாவில் விழுந்தது. இந்த விபத்து தொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) விசாரணை நடத்தி வருகின்றன.
மீட்பு பணிகளில் அமெரிக்க கடலோர காவல்படை, கால்வெஸ்டன் போலீஸ், கால்வெஸ்டன் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம், டெக்சாஸ் பொது பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல அமைப்புகள் ஈடுபட்டன. மெக்சிகன் கடற்படை இந்த விபத்தை "துரதிர்ஷ்டவசமான விபத்து" என வர்ணித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து மருத்துவ உதவி பணிகளின் ஆபத்துகளை எடுத்துக்காட்டுகிறது. விசாரணை முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உலகெங்கும் இரங்கல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: "அமெரிக்காவுக்கு உரிமை இருக்கும்போது இந்தியாவுக்கு ஏன் தடை? ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து புதின் கேள்வி!