ஈரான் மீது 3000 குண்டுகள் வீச்சு; 555 பேர் பலியான அதிர்ச்சி - "இன்னும் தாக்குவோம்" என ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரானில் கமேனி உள்ளிட்ட 45 முக்கியத் தலைவர்கள் போரில் பலியான நிலையில் தொடர்ந்து தாக்குவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் போர் அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வரும் இடைவிடாத வான்வழித் தாக்குதல்களில், இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்தத் தாக்குதல் ஈரானின் ராணுவக் கட்டமைப்பை முற்றிலும் நிலைகுலையச் செய்துள்ளது.
ஈரான் முழுவதும் உள்ள ஏவுகணைத் தளங்கள், அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவத் தலைமையகங்களைக் குறிவைத்து இஸ்ரேல் (IDF) மற்றும் அமெரிக்கப் படைகள் இதுவரை 3,000-க்கும் அதிகமான குண்டுகளை வீசித் தரைமட்டமாக்கியுள்ளன. "ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி" (Operation Epic Fury) என்ற பெயரில் நடத்தப்படும் இந்தத் தாக்குதல் ஈரானின் வரலாற்றிலேயே மிக மோசமானப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர், ராணுவத் தளபதி உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்கள் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதை ஈரான் உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க: ஈரானின் தொடர் தாக்குதல்..!! சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிக மூடல்..!!
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை 555 பேர் பலியாகியுள்ள நிலையில், படுகாயமடைந்த ஆயிரக்கணக்கானோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை இன்னும் பல மடங்கு உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஈரானின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "ஈரான் அடங்கி இருப்பது அவர்களுக்கு நல்லது; இல்லையெனில் அவர்கள் இதுவரை பார்த்திராத அளவிற்கு மிக மோசமானத் தாக்குதலைத் தொடருவோம்" என மீண்டும் எச்சரித்துள்ளார்.
ஈரான் வான்வெளி முற்றிலும் மூடப்பட்டுள்ளதாலும், தொடர் குண்டு வீச்சுகளாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்தப் போரை நிறுத்தக் கோரிக்கை விடுத்து வரும் வேளையில், இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டுப் படைகள் தங்களது அடுத்தகட்டத் தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றன.
இதையும் படிங்க: ஆத்திரம் அடங்காத ஈரான்..!! தொடர்ந்து கேட்கும் குண்டு சத்தம்.. ஜெருசலேம் மீதும் அட்டாக்..!!