×
 

ஆப்கான் மருத்துவ மாணவர்களுக்கு ஷாக்!! பாகிஸ்தானில் படிப்பை தொடர தடை, வெளியேற உத்தரவு!!

அங்கு பயிலும் 22 ஆப்கான் மாணவர்களுக்கு நிர்வாக நடைமுறைகளை முடித்து 24 மணி நேரத்திற்குள் வெளியேறக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் உறவுகளில் ஏற்பட்டுள்ள ஆழமான விரிசல் இப்போது கல்வித் துறையிலும் தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் ஆப்கான் மாணவர்களுக்குப் புதிய சேர்க்கை வழங்கக் கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே பயின்று வரும் ஆப்கான் மாணவர்களும் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு உடனடியாகத் தாய்நாடு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவை அனுப்பியுள்ளது. நடப்பு கல்வியாண்டில் ஆப்கான் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அல்லது புதிய சேர்க்கை அளிக்கக் கூடாது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் படிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. 

சுகாதார அமைச்சகத் தரப்பில் இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும், பிற வெளிநாட்டு மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாகூரில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தியுள்ளது. அங்கு பயிலும் 22 ஆப்கான் மாணவர்களுக்கு நிர்வாக நடைமுறைகளை முடித்து 24 மணி நேரத்திற்குள் வெளியேறக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அசிம் முனீருக்கு கூடுதல் அதிகாரம்.. பாகிஸ்தானில் அமலுக்கு வந்த புதிய ராணுவ சட்டங்கள்!!

இதற்கிடையே பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர் கான், முறையான பாஸ்போர்ட் மற்றும் சட்டப்பூர்வ தங்குதல் ஆவணங்களை வைத்திருக்கும் மாணவர்கள் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். செல்லுபடியாகும் விசா இல்லாதவர்கள் சட்டவிரோத வெளிநாட்டவராகக் கருதப்பட்டு, வெளியேற்றத் திட்டத்தின் கீழ் நாட்டை விட்டு அனுப்பப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்குப் பின்னணியில் இரு நாடுகளுக்கிடையேயான பதட்டமே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து, தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாகக் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் காபூலில் உள்ள தாலிபான் அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து வருகிறது. 

கடந்த ஓராண்டில் மட்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஆப்கான் குடிமக்கள் பாகிஸ்தானில் இருந்து கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மருத்துவ மாணவர்கள் மீதான இந்த புதிய உத்தரவு, ஏற்கனவே நெருக்கடிக்கு உள்ளான ஆப்கான் சமூகத்தின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
 

இதையும் படிங்க: "எல்லைக் கோட்டில் அதிரும் தேசபக்தி" - அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின பிரம்மாண்ட நடன ஒத்திகை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share