×
 

சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக்., பாதுகாப்பு படை! பாக்., ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

இதில் பாகிஸ்தான் ராணுவம், போலீஸ், சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பி.எல்.ஏ., வீரர்கள் அறிவித்தனர்.

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் தனி நாடு கோரி பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பெரும்பான்மையான பலுச் இன மக்களால் ஆதரிக்கப்படும் ஆயுத அமைப்பான பலுச் லிபரேஷன் ஆர்மி (பி.எல்.ஏ.) அரசுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சில நாட்களுக்கு முன் பி.எல்.ஏ. வீரர்கள் மீண்டும் பெரும் தாக்குதலைத் தொடங்கினர். 'ஆபரேஷன் ஹெரோப் இரண்டாம் கட்டம்' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 40 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ஸ்டேஷன்கள், போலீஸ் வாகனங்கள், சிறைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை குறிவைத்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மிக முக்கியமாக, பெண்கள் உட்பட 11 பேர் தற்கொலைப்படைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் பாகிஸ்தான் ராணுவம், போலீஸ் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டதாக பி.எல்.ஏ. அறிவித்துள்ளது. தங்கள் தரப்பில் 18 பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆப்ரேஷன் ஹெரோப்!! 40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

இந்த எண்ணிக்கையை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. ஆனால் பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை எதிர்கொள்வதில் பாதுகாப்பு படைகள் செயலிழந்து விட்டன என்ற உண்மையை பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

பேச்சின் போது அவர் கூறியதாவது: பலுசிஸ்தான் மாகாணம் பாகிஸ்தானின் மொத்த பரப்பளவில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியை உள்ளடக்கியுள்ளது. பரந்த பாலைவனங்கள், மலைகள் நிறைந்த இப்பகுதியை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமானது. பெருமளவு படைகளை நிறுத்த வேண்டியுள்ளது. பி.எல்.ஏ. போராளிகள் ராணுவத்தை விட மேம்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் அவர்களிடம் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதிகளுடன் அரசு எந்த பேச்சுவார்த்தையும் நடத்த தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பலுசிஸ்தான் போராட்டம் பாகிஸ்தானின் உள் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த வன்முறை தொடர்ந்தால் மாகாணத்தில் மேலும் அமைதியின்மை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பி.எல்.ஏ.வின் இந்தத் தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் மக்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் என்று அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share