ஆப்ரேஷன் ஹெரோப்!! 40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!
பலுச் விடுதலை போராட்ட வீரர்கள் நடத்திய தாக்குதல்களில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பல ஆண்டுகளாக தனி நாடு கோரி போராட்டம் நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையாக வாழும் பலுச் இன மக்களின் ஆயுத அமைப்பான பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி (பி.எல்.ஏ.) அரசுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பி.எல்.ஏ. வீரர்கள் மீண்டும் பெரிய அளவில் தாக்குதலை தொடங்கியுள்ளனர். 'ஆப்பரேஷன் ஹெரோப் 2.0' (Operation Herof Phase II) என்ற பெயரில் இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. கடந்த 40 மணி நேரத்திற்கும் மேலாக பலுசிஸ்தானில் வன்முறை தொடர்கிறது.
மாகாணத்தின் பல பகுதிகளில் போலீஸ் ஸ்டேஷன்கள், போலீஸ் வாகனங்கள், சிறைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து துப்பாக்கி சூடு, வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பெண்கள் உட்பட 11 பேர் தற்கொலை தாக்குதல்களை (fidayeen attacks) மேற்கொண்டுள்ளனர். இதில் பி.எல்.ஏ. வீரர்கள் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!
பி.எல்.ஏ. தரப்பில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவம், போலீஸ், ஃப்ரான்டியர் கார்ப்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 17 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். தங்கள் தரப்பில் 18 பேர் மட்டுமே உயிரிழந்ததாக பி.எல்.ஏ. தெரிவித்துள்ளது. இதில் பல பெண் போராளிகள் (women fidayeen) உள்ளனர்.
ஆனால் பாகிஸ்தான் அரசு இந்த கூற்றை மறுத்துள்ளது. தாக்குதல்களை முறியடிக்க ராணுவமும் போலீசும் இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதாக கூறியுள்ளது. இதில் 145 முதல் 177 வரை பி.எல்.ஏ. போராளிகள் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது. சண்டையில் 31 பொதுமக்கள் (ஐந்து பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட) மற்றும் 17 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.
குவெட்டா, க்வாடார், மாஸ்துங், நோஷ்கி உள்ளிட்ட பல நகரங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. இது பலுசிஸ்தானில் சமீப காலங்களில் நடந்த மிகப்பெரிய வன்முறை சம்பவங்களில் ஒன்றாகும். பாகிஸ்தான் அரசு பொது கூட்டங்கள், போராட்டங்கள் ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது. பிராந்தியத்தில் பதற்றம் உச்சத்தில் உள்ளது.
இரு தரப்பு கூற்றுகளும் முரண்படுவதால், உண்மை நிலை என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் பலுசிஸ்தான் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது. பாகிஸ்தான் அரசு இந்தியாவை குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இந்தியா அதை மறுத்துள்ளது.
இந்த வன்முறை தொடர்ந்தால் பலுசிஸ்தானில் மேலும் உயிரிழப்புகள் ஏற்படலாம். சர்வதேச அளவில் இது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: COLDRIF மருந்து... மேலும் ஒரு உயிர்பலி... 4 வயது குழந்தை உயிரிழந்த சோகம்..!