×
 

அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி! ஹெச்1பி விசா விவகாரத்தில் இந்தியர்களுக்கு சிக்கல்!!

ஹெச்1பி விசா பெறுவதற்காக அதிபர் டிரம்ப் விதித்த கட்டுப்பாடுகளை தொடர அமெரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இது இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய ஹெச்-1பி விசாவுக்கான $100,000 (சுமார் ரூ.85 லட்சம்) கட்டண உயர்வை அமல்படுத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்-1பி விசாவில் 70 சதவீதத்துக்கும் மேல் இந்தியர்களே பெறுவதால் இந்த முடிவு அவர்களை பெரிதும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

அதிபர் டிரம்ப் செப்டம்பர் மாதம் வெளியிட்ட உத்தரவின்படி, புதிய ஹெச்-1பி விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது முன்பு இருந்த $2,000 முதல் $5,000 வரையிலான கட்டணத்தைவிட பல மடங்கு அதிகம். இந்த உத்தரவு அமெரிக்க தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், வெளிநாட்டு ஊழியர்களால் அமெரிக்கர்கள் வேலை இழக்காமல் தடுக்கவும் என்று டிரம்ப் தரப்பில் கூறப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க வர்த்தக சபை (யு.எஸ். சேம்பர் ஆஃப் காமர்ஸ்) மற்றும் பல்கலைக்கழகங்களின் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தக் கட்டண உயர்வு சட்டவிரோதமானது என்றும், நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை குறைக்க நேரிடும் என்றும் அவர்கள் வாதிட்டனர். ஆனால், வாஷிங்டன் டி.சி. மாவட்ட நீதிமன்ற நீதிபதி பெரில் ஹோவெல் இந்த வாதங்களை நிராகரித்தார்.

இதையும் படிங்க: இந்து இளைஞர் கொலை! வருத்தம் தெரிவிச்சா போதுமா? ஆக்சன் வேணும்! வங்கதேச அரசுக்கு சசி தரூர் அறிவுறுத்தல்!

நீதிபதி தனது தீர்ப்பில், "குடியேற்றம் மற்றும் விசா விவகாரங்களில் அதிபருக்கு விரிவான அதிகாரம் உள்ளது. இந்தக் கட்டண உயர்வு சட்டத்துக்கு உட்பட்டது" என்று கூறினார். பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் அதிபருக்கு முடிவெடுக்கும் உரிமை உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்துக்கு பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.

அமெரிக்க வர்த்தக சபை தரப்பில், "நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஹெச்-1பி திட்டத்தை காங்கிரஸ் நோக்கம் போல செயல்படுத்த சட்டரீதியான வழிகளை ஆராய்வோம்" என்று கூறப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

ஹெச்-1பி விசா அமெரிக்க நிறுவனங்களில் திறன் வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த அனுமதிக்கிறது. ஆண்டுக்கு 85,000 விசாக்கள் வழங்கப்படுகின்றன (65,000 பொது + 20,000 முதுகலை பட்டதாரிகள்). இதில் 70 சதவீதத்துக்கும் மேல் இந்தியர்களே பெறுகின்றனர். இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க டெக் நிறுவனங்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றன. இந்தக் கட்டண உயர்வு இந்திய தொழிலாளர்களின் வாய்ப்புகளை குறைக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தத் தீர்ப்பு இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. பல இந்திய ஊழியர்கள் அமெரிக்காவில் பணியாற்ற இந்த விசாவை நம்பியுள்ளனர்.

இதையும் படிங்க: வங்கதேசத்தில் தொடரும் வன்முறை!! ஓயாத அழுகுரல்!! டாக்காவில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share