×
 

சர்வதேச வழக்கில் புதிய திருப்பம்.. டி.ஒய். சந்திரசூட்டை மத்தியஸ்தராக நியமித்த ரஷ்யா..!!

உக்ரைன் - ரஷ்யா இருநாடுகளும் போரை கைவிடவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தாலும், ரஷ்யாவை வெளிப்படையாக இந்தியா கண்டிப்பதில்லை.

உக்ரைனின் அரசுக்குச் சொந்தமான ஓஷாட்பேங்க், ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளால் தனது வங்கிக் கிளைகளும் சொத்துக்களும் இழந்ததாகக் குற்றம் சாட்டி, சர்வதேச முதலீட்டு ஒப்பந்தத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ரஷ்யா தனது மத்தியஸ்தராக இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டை நியமித்துள்ளது.

2022-ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான தாக்குதலைத் தொடுத்ததைத் தொடர்ந்து, டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா ஆகிய பகுதிகளில் இருந்த ஓஷாட்பேங்க்கின் பெரும்பாலான கிளைகள், நிதிச் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கைப்பற்றப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது. இதனால் பல நூறு மில்லியன் டாலர் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டதாகவும், அங்கு வங்கிச் சேவைகள் முற்றிலும் முடங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த இழப்புகளுக்கு உரிய இழப்பீடு கோரி, 1998-ஆம் ஆண்டு உக்ரைன்-ரஷ்யா இடையே கையெழுத்தான இருதரப்பு முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் (BIT) கீழ் சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் முதலீட்டாளர்களும் மற்றொரு நாட்டில் செய்யும் முதலீடுகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. ஓஷாட்பேங்க் மூன்று முக்கிய விதிகளை ரஷ்யா மீறியதாகக் குற்றம் சாட்டுகிறது. 

இதையும் படிங்க: ரஷ்யா மீது வன்மத்தை கக்கும் உக்ரைன்.. தொடர் டிரோன் தாக்குதல்.. 7 பேர் பரிதாப பலி..!!

முதலாவதாக, சொத்துக்களை முறையான காரணமோ சட்ட நடைமுறையோ இல்லாமல் தன்னிச்சையாகப் பறிமுதல் செய்ததுடன், இழப்பீடும் வழங்கவில்லை. இரண்டாவதாக, முதலீட்டாளர்களுக்கு நியாயமான மற்றும் பாதுகாப்பான வணிகச் சூழலை உருவாக்கத் தவறியது. மூன்றாவதாக, போர் மற்றும் அவசரநிலைக் காலங்களில் ஏற்படும் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு அளிக்க மறுத்தது. இது ஓஷாட்பேங்க்கின் முதல் வழக்கு அல்ல.

2014-இல் கிரிமியாவை ரஷ்யா இணைத்தபோதும் அங்குள்ள சொத்து இழப்புக்காக வழக்குத் தொடர்ந்து, 2018-இல் சுமார் 1.1 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்கும் தீர்ப்பைப் பெற்றது. தற்போதைய வழக்கில், 2025 ஜூலையில் ரஷ்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பதில் வராததால் 2026 ஏப்ரல் 7-ஆம் தேதி முறைப்படி நடைமுறை தொடங்கப்பட்டது.மூன்று உறுப்பினர்கள் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ரஷ்யா சார்பில் சந்திரசூட், உக்ரைன் சார்பில் கிரேக்க மத்தியஸ்தர் ஸ்டாவ்ரோஸ் பிரெகோலாகிஸ், இரு தரப்பினரும் சேர்ந்து தேர்ந்தெடுத்த கோஸ்டாரிகாவின் முன்னாள் வர்த்தக அமைச்சர் டியாலா ஜிமினெஸ் தலைவராக உள்ளார். முன்னதாக விண்டர்ஷால் டீ மற்றும் உக்ரெனெர்கோ தொடர்பான வழக்குகளில் ரஷ்யா அணுகியபோது சந்திரசூட் நிராகரித்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் ஏற்றுக்கொண்டுள்ளார். மத்தியஸ்தர் என்பது ஒரு தரப்பின் வழக்கறிஞராக அல்ல, சுதந்திரமாக தீர்ப்பு வழங்கும் பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தொடர்ந்து போர்நிறுத்தத்தையும் பேச்சுவார்த்தையையும் வலியுறுத்தி வருகிறது. அதேநேரம் ரஷ்யாவை வெளிப்படையாகக் கண்டிக்காமல், தொடர்புடைய ஐ.நா. தீர்மானங்களில் வாக்களிக்காமல் விலகி வருகிறது. இந்த வழக்கு போர் தொடர்பான சொத்து இழப்புகளுக்கு சர்வதேச சட்ட வழிமுறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ஆத்திரத்தை கொட்டித்தீர்க்கும் ரஷ்யா..!! உக்ரைன் மீது அட்டாக்..!! 3 பேர் பரிதாப பலி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share