பஞ்சாப் CM முகாம் அலுவலகத்தில் சிபிஐ அதிரடி ரெய்டு..!! சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்..!!
மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி ஆம் ஆத்மி அரசைக் குறிவைத்து அச்சுறுத்த முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சண்டிகர் முகாம் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி (ஓஎஸ்டி) ராஜ்பீர் சிங் குமான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மீதான கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் அமலாக்கத்துறை வழங்கிய அறிக்கைகளின் அடிப்படையில் சிபிஐ முதற்கட்ட வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. அதிகாரிகளின் இடமாற்றம் (ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டவை), புதிய நியமனங்கள், துறைசார் நடவடிக்கைகள், கொள்கை முடிவுகள், நிர்வாக அனுமதிகள், டெண்டர் நிபந்தனைகள், உரிமங்கள் வழங்குதல், நில பயன்பாட்டு மாற்றங்கள், சொத்து தகராறுகள் மற்றும் வருவாய் தொடர்பான விவகாரங்களில் பண ஆதாயத்திற்காக தலையிட்டு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அரசு உத்தரவுகள் மற்றும் கொள்கை வரைவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே தனியார் நபர்களுக்கு வழங்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதையொட்டி சண்டிகரில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகம் (செக்டர் 2, வீடு எண் 50), சங்க்ரூர் மாவட்டம் கராச்சோனில் உள்ள குமானின் வீடு, மொகாலி, குர்தாஸ்பூர், லூதியானா, பாட்டியாலா, ஜலந்தர் உள்ளிட்ட எட்டு முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ சோதனை நடத்தியது.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... சிக்கும் சிபிஐ அதிகாரிகள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!
இந்தச் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள், செல்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. வழக்கில் ராஜ்பீர் சிங் குமான் உடன் நிதின் கோஹல், ஜித்தின் கோஹல் (ராஜா), ரோமி ராஜா மகாஜன், பீர் தேவிந்தர், ஆர்.எஸ். நாகரா மற்றும் அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் பகவந்த் மான், 2027 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு பாஜக தனது பிரசாரத்தை முன்கூட்டியே தொடங்கிவிட்டதாக விமர்சித்தார். மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி ஆம் ஆத்மி அரசைக் குறிவைத்து அச்சுறுத்த முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார்.
பாஜக தரப்பு இதனை மறுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை நடைபெறுவதாகவும், அரசியல் காரணங்கள் ஏதும் இல்லை என்றும் விளக்கமளித்தது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்துள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த விவகாரம் பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து விவாதப் பொருளாக நீடிக்கிறது.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆவேசம்!