சீனாவின் செயற்கை சூரியன்!! 10 கோடி டிகிரி வெப்பம்! 5.82 லட்சம் கிலோ மின்காந்தத்தால் அதிரடி சாதனை!
செயற்கை சூரியன் திட்டத்தின் புதிய மைல்கல்லாக, 5.82 லட்சம் கிலோ எடையுள்ள, உலகின் மிகப்பெரிய மின்காந்தத்தை உருவாக்கி, நம் அண்டை நாடான சீனா சாதனை படைத்துள்ளது.
செயற்கை சூரியன் திட்டத்தில் புதிய சாதனையாக, 5.82 லட்சம் கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய மின்காந்தத்தை உருவாக்கி சீனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. எதிர்காலத்தில் தூய்மையான, அதிக அளவிலான மின்சார உற்பத்திக்கான அணுக்கரு இணைவு தொழில்நுட்ப முயற்சியில் இந்த சாதனை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், இவை எதிர்காலத்தில் குறைந்து விடும் அபாயமும் உள்ளது. இதற்கு மாற்றாக, சூரியனில் இயற்கையாக நடைபெறும் அணுக்கரு இணைவு செயல்முறையை பூமியில் உருவாக்கி, தூய்மையான மின்சாரத்தை பெற உலக நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக சீனா உருவாக்கி வரும் திட்டமே ‘செயற்கை சூரியன்’ என அழைக்கப்படுகிறது. சூரியனின் மையப்பகுதியில் காணப்படும் அதிக வெப்பநிலை மற்றும் அணுக்கரு இணைவு செயல்முறையை ஆய்வக சூழலில் உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் சரியும் மாணவர்கள் சேர்க்கை! தலைமை ஆசிரியர்கள் சொன்ன அதிர்ச்சி காரணம்! அமைச்சரிடம் புகார்!
இந்த தொழில்நுட்பத்தில் உருவாகும் மிக அதிக வெப்பம் கொண்ட பிளாஸ்மாவை கட்டுப்படுத்த சக்திவாய்ந்த மின்காந்தங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக சீன அறிவியல் அகாடமியின் பிளாஸ்மா இயற்பியல் நிறுவனம் பிரமாண்டமான புதிய மின்காந்தத்தை உருவாக்கியுள்ளது.
ஆங்கில எழுத்தான ‘டி’ வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மின்காந்தம், 69 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதன் எடை சுமார் 5.82 லட்சம் கிலோ ஆகும். இந்த காந்தம், சுமார் 10 கோடி டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் உருவாக்கப்படும் பிளாஸ்மாவை சக்திவாய்ந்த மின்காந்தப் புலத்தின் மூலம் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மின்காந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 2027-ம் ஆண்டுக்குள் சிறிய அளவிலான சோதனை அணுக்கரு இணைவு உலையை உருவாக்கவும், 2030-ம் ஆண்டுக்குள் அணுக்கரு இணைவு மூலம் வணிக ரீதியாக மின்சாரம் உற்பத்தி செய்யவும் சீனா இலக்கு வைத்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் அதிக அளவில் தூய்மையான மின்சாரத்தை பெற முடியும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருப்பினும், அணுக்கரு இணைவு மூலம் வணிக ரீதியான மின்சார உற்பத்தி இன்னும் பல தொழில்நுட்ப சவால்களை கடக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இதையும் படிங்க: மதுபோதையில் பெண்ணிடம் சில்மிஷம்! 'நான் இன்ஸ்பெக்டர்' என மிரட்டிய போலீஸ் அதிகாரி கைது!