இதோட நிறுத்திக்கோங்க! இல்லையினா?! வெனிசுலாவை தாக்கிய அமெரிக்கா! கொந்தளிக்கும் சீனா!
சீனாவின் மிகப்பெரிய கடனாளிகளில் ஒன்றாக வெனிசுலா இன்றும் இருக்கிறது. எனவே, வெனிசுலாவில் ஏற்படும் எந்த ஒரு அரசியல் மாற்றமும், சீனாவுக்கு மிகப்பெரிய நிதி பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸையும் அமெரிக்க ராணுவம் ஜனவரி 3 ஆம் தேதி அதிகாலை கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தது உலக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த மேலாதிக்க செயல் சர்வதேச சட்டங்களையும் வெனிசுலாவின் இறையாண்மையையும் மீறுவதாக உள்ளது என்று சீனா கூறியுள்ளது. மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: வெனிசுலாவில் அமெரிக்கா ஆடிய கோர தாண்டவம்! கியூபாவை சேர்ந்த 32 பேர் பரிதாப மரணம்!
இந்த கைது நடவடிக்கைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு லத்தீன் அமெரிக்க விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதி கியூ சியாவோகி மதுரோவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏனெனில் சீனா லத்தீன் அமெரிக்காவில் தன் செல்வாக்கை விரிவுபடுத்த வெனிசுலாவை முக்கிய மையப்புள்ளியாக பார்க்கிறது. இதற்காக சீனா இதுவரை வெனிசுலாவுக்கு சுமார் 9.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களையும் நிதி உதவிகளையும் வழங்கியுள்ளது.
கடந்த 2006ல் அப்போதைய அதிபர் ஹியூகோ சாவேஸ் காலத்தில் சீனாவுடன் பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அந்த ஒப்பந்தங்களின்படி வெனிசுலா ஒரு நாளைக்கு 10 லட்சம் பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெயை சீனாவுக்கு வழங்க ஒப்புக்கொண்டது.
அதற்கு பிரதிபலனாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக இடம் பெறுவதற்கான அரசியல் ஆதரவை சீனா வழங்கியது. 2008க்குள் சீனாவின் கச்சா எண்ணெய் தேவையில் பாதியை வெனிசுலாவில் இருந்து பெறத் தொடங்கியது.
எதிர்கால எண்ணெய் விநியோகத்தை அடிப்படையாகக் கொண்டு சீனா வெனிசுலாவுக்கு பெரிய அளவில் கடன் வழங்கத் தொடங்கியது. 2006ல் 18,000 கோடி ரூபாயாக இருந்த கடன் 2010ல் 2.43 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
2014ல் உலக எண்ணெய் விலை சரிவு மற்றும் மதுரோ ஆட்சியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனா 90,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. 2015ல் நிலுவை கடன்களை திருப்பி செலுத்தும் முறைகளை எளிதாக்கியது.
2016 முதல் புதிய கடன் வழங்குவதை நிறுத்திய சீனா ஏற்கனவே உள்ள கடன்களை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இன்றும் வெனிசுலா சீனாவின் மிகப்பெரிய கடனாளிகளில் ஒன்றாக உள்ளது.
எனவே மதுரோவின் கைது மற்றும் வெனிசுலாவில் ஏற்படும் அரசியல் மாற்றம் சீனாவுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் சீனாவின் எரிசக்தி தேவையும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனாவின் கடும் கண்டனமும் எச்சரிக்கையும் உலக அரசியலில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெனிசுலாவை தாக்க போதைப்பொருள் காரணமில்லை! அமெரிக்காவின் சீக்ரெட் ப்ளான்!! கொட்டிக்கிடக்கும் வளம்!