பிரிக்ஸ் நாடுகளை பழிவாங்கும் அமெரிக்கா! ட்ரம்ப் ஆட்டத்திற்கு சீனா கொடுத்த பதிலடி!!
வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த நிலையில், 'பிரிக்ஸ் மோதலை விரும்பும் அமைப்பு அல்ல' என, சீனா கூறியுள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரசு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உள்ளன. முழு நேர உறுப்பினராக சவுதி தயாராகி வருகிறது. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பிரிக்ஸ் நாடுகளில் இருக்கின்றனர்.
உலகின் 40 சதவீத பொருளாதாரமும் பிரிக்ஸ் நாடுகளிடம் இருக்கின்றன.இன்னும் 30 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்து வருகின்றன. பிரிக்ஸ் வேகமாக வளர்வது அமெரிக்கா போன்ற நாடுகளை கலக்கம் அடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17வது உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. துவக்க நிகழ்வின் போது பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டன. அதில் அமெரிக்காவின் அடாவடியை வெளுத்து வாங்கி இருந்தன. குறிப்பாக சர்வதேச வர்த்தகத்தை முடக்கும் வகையில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப், உலக நாடுகளுக்க கடுமையான வரி விதிப்பதை பிரிக்ஸ் நாடுகள் கடுமையாக சாடின.
இதையும் படிங்க: ஆட்டத்தை ஆரம்பித்தார் அதிபர் ட்ரம்ப்.. அடுத்தடுத்து வரி விதிப்பு அமல்.. இந்தியா தப்புமா?
அந்த அறிக்கையில், சர்வதேச வர்த்தகத்தில் பல விதமான கட்டுப்பாடுகள் பெருகி வருவது கவலை அளிக்கிறது. கண்மூடித்தனமாக வரியை உயர்த்துகிறார்கள். வரி மற்றும் வரி அல்லாத நடவடிக்கைகள் மூலம் சர்வதேச வர்த்தகத்தை முடக்க பார்க்கிறார்கள். சர்வதேச வினியோக சங்கிலியை சீர்குலைக்கவும், சர்வதேச பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மையை கொண்டு வரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறார்கள் என்று அமெரிக்காவை மறைமுகமாக பிரிக்ஸ் சாடியது. அதே போல் அமெரிக்காவின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று சர்வதேச வர்த்தக அமைப்பையும் பிரிக்ஸ் வலியுறுத்தியது.
பிரிக்ஸ் நாடுகளின் வலிமையான மெசேஜ் அமெரிக்காவுக்கு பதற்றத்தை உண்டு பண்ணியது. இந்த அறிக்கை வெளியானதும் அதிபர் டிரம்ப் ஆத்திரத்தை கொட்டி தீர்த்தார். அமெரிக்காவின் எதிர்ப்பு கொள்கைகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் சேரும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அவர் மிரட்டல் விடுத்தார். இது பிரிக்ஸ் நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு சீனா தக்க பதிலளித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் நேற்று கூறியதாவது: பல நாடுகளை உள்ளடக்கிய அமைப்பான பிரிக்ஸ், வளரும் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கான தளமாக விளங்குகிறது. எந்தவொரு நாட்டையும் குறிவைத்து மோதலில் ஈடுபடும் நோக்கில் பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்படவில்லை. வர்த்தகம் மற்றும் வரி விதிப்பு மோதலில் யாருக்கும் வெற்றி கிடைக்காது.
அதிகளவில் வரி விதிக்கும் போக்கு முன்னேற்றத்துக்கான எந்த வழியையும் வழங்காது. எனவே, அதிகளவு வரிகளை விதிப்பது யாருக்கும் பலனளிக்காது. வரிகளை, மற்றவர்கள் மீது திணிக்கும் கருவியாக பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாம தயார் பண்ணா தரமா தானே இருக்கும்! ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா ஆயுதங்களுக்கு டிமாண்ட்!