உலக பொருளாதாரத்திற்கு ஆபத்து! பெயரை குறிப்பிடாமல் இஸ்ரேல் - ஈரான் மோதலை சாடிய இந்தியா!
மத்திய கிழக்கில் எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மிகவும் கவலைக்குரியவை என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் முக்கிய எரிசக்தி மற்றும் எரிவாயு நிலையங்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்களுக்கு இந்தியா இன்று தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் பொதுமக்களின் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் சிவில் கட்டமைப்புகளை, குறிப்பாக எரிசக்தி நிலையங்களைச் சீர்குலைக்கும் எந்தவொரு தாக்குதலையும் இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் உலகளாவிய எரிசக்தி சூழல் நிலையற்று இருக்கும் நிலையில், இத்தாக்குதல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என இந்தியா எச்சரித்துள்ளது. இது இந்தியாவின் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பெருமளவில் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: கலவர பூமியாக மாறிய மெக்சிகோ..!! பாதுகாப்பா இருங்க.. இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!!
யாருடைய பெயரும் இல்லை: இந்தியா தனது அறிக்கையில் இஸ்ரேல் அல்லது ஈரான் என எந்த நாட்டின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், அமீரகத்தின் ஹப்ஷன் (Habshan) எரிவாயு நிலையம் மற்றும் ஈரானின் தென் பார்ஸ் எரிசக்தி மையம் ஆகியவை தாக்கப்பட்ட பின்னணியிலேயே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
பாதுகாப்பான போக்குவரத்து: பிரதமர் நரேந்திர மோடி அமீரக அதிபருடன் தொலைபேசியில் பேசியபோது, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் செல்வதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 88% மற்றும் சமையல் எரிவாயு (LPG) தேவையில் 90% மேலாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. இந்தப் போர் காரணமாக ஏற்கனவே உள்நாட்டில் சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்துள்ளதும், விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வந்தாச்சு எல்பிஜி ஏடிஎம்... இனி 3 நிமிடங்களில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்... எங்கு தெரியுமா?