உசுரு பத்ரம்! அமெரிக்க கொடுத்த வார்னிங்!! வெனிசுலா செல்லும் விமானங்கள் ரத்து!
ராணுவ நடவடிக்கைகள் காரணமாக, வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால். உலகளாவிய பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக நீடிக்கும் பகை, இப்போது போர் அறிகுறிகளை காட்டத் தொடங்கியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரிபியன் கடல் பகுதிகளில் சந்தேக கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாக வெனிசுலா அதிபர் நிகோலாஸ் மதுரோ குற்றம் சாட்டுகிறார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை அவர் முற்றிலும் மறுத்துள்ளார். அந்த கப்பல்களில் மீனவர்கள், தொழிலாளர்கள் மட்டுமே இருந்ததாகவும், சர்வதேச சட்டங்களை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கரிபியன் கடற்பகுதியில் அமெரிக்கா போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் குவிக்கத் தொடங்கியுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த USS ஜெரால்ட் ஆர். ஃபோர்ட் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை அனுப்பி வைத்துள்ளது.
இதையும் படிங்க: நிதி மசோதாவுக்கு முட்டுக்கட்டை!! அமெரிக்காவில் 3,300 விமானங்கள் ரத்து!! மக்கள் அவதி!
இது போருக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதற்கு பதிலடியாக, வெனிசுலா அதிபர் மதுரோ சிறப்பு அவசரநிலையை அறிவித்துள்ளார். 'பிளான் இன்டிபென்டென்சியா 200' என்ற திட்டத்தின் கீழ், நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ராணுவ நடவடிக்கைகள் காரணமாக, வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் (FAA) தெரிவித்துள்ளது. "வெனிசுலா வான்வெளியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது. ராணுவ செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.
அனைத்து உயரங்களிலும் விமானங்கள், புறப்படும், இறங்கும் விமானங்கள், தரையில் உள்ள விமானங்கள் ஆகியவற்றுக்கு ஆபத்து உள்ளது" என்று FAA NOTAM (Notice to Air Missions) அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் GNSS (Global Navigation Satellite System) தொடர்பான தொடர்பு தொந்தரவுகள் அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, உலகளாவிய பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான சேவைகளை ரத்து செய்துள்ளன. ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் & டொபாகோ நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் உட்பட ஆறு விமான நிறுவனங்கள் காலவரையின்றி விமானங்களை நிறுத்தியுள்ளன.
போர்ச்சுகல் விமான நிறுவனமான TAP Air Portugal, FAA அறிவிப்பு "வெனிசுலா வான்வெளியில் பாதுகாப்பு உத்தரவாதமில்லை" என்று கூறி சனிக்கிழமை மற்றும் அடுத்த திங்கள்கிழமை விமானங்களை ரத்து செய்தது. துருக்கி ஏர்லைன்ஸ், நவம்பர் 24 முதல் 28 வரை விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மற்றொரு பக்கம், அமெரிக்க விமான நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைடெட் ஆகியவை 2019 முதல் வெனிசுலாவுக்கு நேரடி விமானங்கள் இயக்கவில்லை. ஆனால், வட-தெற்கு அமெரிக்கா இடையேயான விமானங்கள் வெனிசுலா வான்வெளியைத் தவிர்த்து பறக்கத் தொடங்கியுள்ளன. FlightRadar24 தரவுகளின்படி, தெற்கு அமெரிக்காவுக்கான விமானங்கள் வெனிசுலா வான்வெளியை முற்றிலும் தவிர்த்து பறக்கின்றன.
இந்த நிலையில், FAA தொடர்ந்து சூழலை கண்காணிக்கிறது. வெனிசுலா வான்வெளியில் GPS சிக்னல் தொந்தரவுகள் அதிகரித்துள்ளதாகவும், விமானங்களுக்கு அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ராணுவ பதற்றம், உலக விமானப் போக்குவரத்தை பாதித்துள்ளது. வெனிசுலாவின் சைமன் போலிவர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் திகைப்பில் தவிக்கின்றனர்.
இதையும் படிங்க: முடங்கியது அமெரிக்க அரசு நிர்வாகம்!! தவிக்கும் மக்கள்! 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு!!