×
 

முடங்கியது அமெரிக்க அரசு நிர்வாகம்!! தவிக்கும் மக்கள்! 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு!!

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் நாட்டின் முக்கிய 40 விமான நிலையங்களில், விமானங்கள் சேவையை 10 சதவீதம் குறைப்பதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இப்போது அரசு இயக்கம் முழுவதும் நின்று போய் உள்ளது. இதை அங்கு 'கவர்ன்மெண்ட் ஷட் டவுன்' என்று சொல்கிறார்கள். அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பிறகு, முந்தைய அதிபர் ஜோ பைடனின் பல திட்டங்களையும் கொள்கைகளையும் மாற்ற விரும்புகிறார். ஆனால், அமெரிக்க பாராளுமன்றத்தில் உள்ள ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

அதனால், அரசு துறைகளுக்கு பணம் ஒதுக்குவதற்கான மசோதாக்கள் நிறைவேறவில்லை. இந்த நிதி முடக்கம் காரணமாக, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அரசு பணிகள் பெருமளவு நின்று விட்டன. இது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட முடக்கமாக மாறி உள்ளது.

இந்த முடக்கத்தால் அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6.7 லட்சம் ஊழியர்கள் கட்டாய விடுப்பில் வீட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. இன்னும் 7.3 லட்சம் ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள். இதனால் அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் செயலிழந்து போய் உள்ளன. 

இதையும் படிங்க: நாசமா போச்சு... கோவில் நகரத்தை குப்பை மேடாக்கியதுதான் திமுக சாதனை..! சீமான் விமர்சனம்

அதில் விமான போக்குவரத்து துறையும் ஒன்று. நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லான்டா, டாலஸ் போன்ற முக்கிய விமான கட்டுப்பாட்டு மையங்களில் பாதி ஊழியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். விமான கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சோர்வடைந்து வருகிறார்கள். இதனால் விமானங்கள் பெரிதும் தாமதமாகின்றன அல்லது ரத்து செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்தாகி வருகின்றன.

இந்த பிரச்சனையை சமாளிக்க, டிரம்ப் நிர்வாகம் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது. நாட்டின் 40 முக்கிய விமான நிலையங்களில் 10 சதவீத விமான சேவைகளை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. முதல் நாளில் 4 சதவீதம், வார இறுதியில் 6 சதவீதம், அடுத்த வாரம் முழுவதும் 10 சதவீதம் என்று குறைப்பு இருக்கும். இந்த நிலையங்கள் பெரிய நகரங்களில் உள்ளவை. 

யூனைடெட், டெல்டா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பல விமானங்களை ரத்து செய்துள்ளன. பயணிகள் இப்போதே டிக்கெட் மாற்றம் அல்லது ரத்து குறித்து ஏர்லைன்ஸ் நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஃபீஸ் இல்லாமல் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று நிறுவனங்கள் கூறியுள்ளன.

இந்த முடிவு பயணிகளுக்கு பெரும் கவலை அளிக்கிறது. குறிப்பாக நவம்பர் இறுதியில் வரும் தாங்க்ஸ்கிவிங் விடுமுறை நெருங்குகிறது. அப்போது மில்லியன் கணக்கானோர் விமானத்தில் பயணம் செய்வார்கள். இப்போதே திட்டமிட்டால் தான் பிரச்சனை தவிர்க்க முடியும். டிரம்ப் இதை பாதுகாப்பு நடவடிக்கை என்று கூறுகிறார்.

ஆனால், எதிர்க்கட்சி இதை அரசியல் அழுத்தம் என்று விமர்சிக்கிறது. இந்த முடக்கம் எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியவில்லை. காங்கிரஸ் ஒப்புக்கொள்ளும் வரை இந்த பிரச்சனை தொடரும். அமெரிக்காவில் பயணம் திட்டமிடுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஒரு வருஷம் கொண்டாட்டம்தான்!! மத்திய அரசின் பக்கா ப்ளான்! வந்தாச்சு சூப்பர் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share