×
 

ரஷ்ய அமைச்சருடன் போட்டோ எடுக்க மறுத்த ஐரோப்பிய நாடுகள்! G20 மாநாட்டில் வெடித்த புதிய சர்ச்சை!

ரஷ்ய அமைச்சரின் வருகைக்கு போலந்து மற்றும் ஜெர்மனி நாட்டு நிதியமைச்சர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் அடுத்த கட்டமாக, சிலுவானோவுடன் இணைந்து குழு புகைப்படத்தில் நிற்க ஐரோப்பாவைச் சேர்ந்த அமைச்சர்கள் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் G20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் ரஷ்யா மீண்டும் பங்கேற்றதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. குறிப்பாக ரஷ்ய நிதியமைச்சர் நேரடியாக மாநாட்டில் கலந்து கொண்ட நிலையில், அவருடன் குழு புகைப்படம் எடுக்க ஐரோப்பிய அமைச்சர்கள் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச நிதி விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக G20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஆஷ்டன் நகரில் தொடங்கியது. உக்ரைன் போர் தொடங்கிய 2022-ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா இந்த மாநாட்டில் பங்கேற்காமல் இருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு ரஷ்ய நிதியமைச்சர் ஆன்டன் சிலுவானோவ் நேரடியாக மாநாட்டில் கலந்து கொண்டார். அவரை மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா அனுமதித்தது மற்ற G20 நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தையே கிடையாது! உக்ரைன் போரில் புடினின் அதிரடி எச்சரிக்கை!

ரஷ்ய அமைச்சரின் வருகைக்கு போலந்து மற்றும் ஜெர்மனி நாட்டு நிதியமைச்சர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் அடுத்த கட்டமாக, சிலுவானோவுடன் இணைந்து குழு புகைப்படத்தில் நிற்க ஐரோப்பாவைச் சேர்ந்த அமைச்சர்கள் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஷ்ய அமைச்சர் இல்லாமல் மற்ற அமைச்சர்களை மட்டும் வைத்து குழு புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாநாட்டை செய்தியாக்க சென்ற முக்கிய சர்வதேச ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக புளூம்பெர்க், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட ஊடகங்களின் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஜெர்மனி நிதியமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் நிதி நிலைத்தன்மை போன்ற முக்கிய விவகாரங்களை விவாதிக்க வேண்டிய G20 மாநாடு, ரஷ்யாவின் பங்கேற்பால் அரசியல் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்துவரும் நிலையில், அமெரிக்கா ரஷ்ய நிதியமைச்சரை மீண்டும் மாநாட்டில் பங்கேற்க அனுமதித்திருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பொருளாதார விவாதங்களைத் தாண்டி, G20 மாநாட்டின் அரசியல் சூழலும் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: உக்ரைன் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல்! இந்தியர் உள்பட 12 பேர் பலி! 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share