பாக்-உடன் போர் நிறுத்தம்... இந்தியாவுக்கு மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் யார்..? சந்தேகம் கிளப்பும் எதிர்கட்சிகள்..!
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய, நாம் கதவுகளை திறந்து விட்டுள்ளோமா?
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்திற்குப் பிறகு, நேற்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார். இப்போது போர் நிறுத்தத்திற்கு சம்மதித்ததற்கான பெருமையை அமெரிக்கா தட்டிச் சென்றது. இதுகுறித்து உத்தவ் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றன.
உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத், ''பெருமையை எடுத்துக் கொண்ட டிரம்ப் இவ்வளவு சக்திவாய்ந்தவராக இருந்தால் ஏன் இஸ்ரேல் மற்றும் காசாவை நிறுத்த முடியவில்லை? டிரம்ப் போர் நிறுத்தத்திற்காக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தார்.
இதையும் படிங்க: இந்தியாவை வைத்து பகடையாடும் பக்கத்து நாடுகள்... வங்கதேசத்தின் சீன- அமெரிக்க விசுவாசம்..!
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது அழுத்தம் கொடுத்து பாகிஸ்தானுடனான மோதலை நிறுத்துகிறார். நாங்கள் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. நாங்கள் மூன்றாவது ஜனாதிபதி தலையிட முடியாத ஒரு நாடு. இந்த வகையான முயற்சி நமது இறையாண்மையின் மீதான தாக்குதல், அமெரிக்க அதிபர் தலையிட வேண்டிய அவசியம் மோடி அரசாங்கத்தின் பலவீனமும் கூட.
பிரதமர் மோடி, போரை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? சிந்தூரை அவமதிப்பவர்களுக்காக மட்டுமே நாங்கள் ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கினோம். எங்கள் 26 தாய்மார்கள், சகோதரிகளின் சிந்துாரம் அந்த பயங்கரவாதிகள், பாகிஸ்தானியர்களால் அழிக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு மோடி அரசு என்ன பழிவாங்கல் செய்தது என்பதை இப்போது சொல்ல வேண்டும், காஷ்மீருக்குள் நுழைந்த அந்த 6 பயங்கரவாதிகள் இன்னும் நம் நாட்டின் நிலத்தில் எங்கோ ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் இன்னும் ஒழிக்கவில்லை'' எனக் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “சண்டை நிறுத்த அறிவிப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் கூறும் முன்பாகவே அமெரிக்கா வெளியிடுகிறது. இரு நாடுகள் பிரச்னையில் 'நடுநிலை’ என்ற அமெரிக்க வெளியுறவு செயலாளரின் கருத்து, பல கேள்விகளை எழுப்புகிறது. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய, நாம் கதவுகளை திறந்து விட்டுள்ளோமா? இது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி உடனே அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து, அமெரிக்க ஜனாதிபதி ஏன் அதை அறிவித்தார் என்பது குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அடுத்த பெரும் தலை வலி.. தீவிரமடையும் பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கை.!!