மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் ஜலசந்தி! ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி! போர் பதற்றம்!
ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதுடன், சைப்ரஸ் நாட்டு கப்பலையும் தாக்கியது; அமெரிக்கா புதிய தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்தது.
மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் உலக நாடுகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
தகவல்களின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதுடன், இயந்திர அறையும் கடுமையாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஒருவரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சேதம் காரணமாக அந்தக் கப்பலால் தனது பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்குப் பதிலடியாக, அமெரிக்கா ஈரான் மீது புதிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கப் படையின் மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் நடத்தப்படும் மூன்றாவது கட்டத் தாக்குதல் இதுவாகும் என்றும், சர்வதேச கடல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின் தாக்குதல் திறனை குறிவைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 1000 ஏவுகணைகள் தயார்! ஈரான் தான் டார்கெட்! அச்சுறுத்தும் அதிபர் ட்ரம்ப்!
இதற்கிடையில், மேற்கு ஆசியப் பகுதியில் அமெரிக்கா தனது தலையீட்டை நிறுத்தும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டே இருக்கும் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மறு அறிவிப்பு வெளியாகும் வரை இந்த முக்கிய கடல் வழித்தடத்தில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளதால், சர்வதேச வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் கச்சா எண்ணெய் சந்தையில் தாக்கம் ஏற்படுமா என்ற கவலை அதிகரித்துள்ளது. மேற்கு ஆசியாவின் அடுத்தகட்ட நிலைமை எப்படி அமையும் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: திரும்பிய திசையெல்லாம் அலறல் சத்தம்.. குவைத், பஹ்ரைன், கத்தார் மீது ஈரான் கொடூர தாக்குதல்... பற்றி எரியும் மத்திய கிழக்கு...!