நீங்களே தனியா பேசிக்கிறீங்க போலயே! அமெரிக்காவை கிண்டல் செய்யு ஈரான்! பேச்சுவார்த்தை மறுப்பு!
தன்னை தற்காத்து கொள்வதற்காக அமெரிக்கா தன்னிடமே பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது என ஈரான் தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் நீடித்து வரும் போர் பதற்றத்தின் மத்தியில், அமெரிக்கா கூறி வரும் பேச்சுவார்த்தை தகவல்களை ஈரான் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மாறாக, தன்னுடைய போர்த் தோல்வியை மறைக்க அமெரிக்கா தன்னிடமே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது என ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியதைத் தொடர்ந்து, இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் மேற்காசியப் பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ஐந்து நாட்களுக்கு தாக்குதலை நிறுத்தும் முன்மொழிவு குறித்து கூறியிருந்தார். மேலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: இதுவரை பாக்காத தாக்குதல் நடக்கும்!! ட்ரம்ப் சும்மா மிரட்ட மாட்டாரு! ஈரானுக்கு அமெரிக்கா வார்னிங்!
ஆனால், இந்தக் கருத்துகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. பல்வேறு நாடுகளில் உள்ள ஈரான் தூதர்களும் கூட அமெரிக்கா கூறும் பேச்சுவார்த்தை தகவல்களை ஏற்கவில்லை. இந்த நிலையில், ஈரான் ராணுவத்தின் ஒருங்கிணைந்த படைக்கான செய்தித் தொடர்பாளர் இப்ராகிம் ஜல்பகாரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அமெரிக்கா போரில் தோல்வியடைந்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
“தன்னை காப்பாற்றிக் கொள்ளவே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகிறது என கூறுகிறது. உண்மையில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. உங்கள் தோல்வியை ஒப்பந்தம் என கூற வேண்டாம்” என அவர் கடுமையாக விமர்சித்தார்.
இதற்கிடையில், டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஈரானில் உள்ள சரியான தரப்பினருடன் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருவதாகவும், அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்ட ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்து முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில், மேற்காசியப் பகுதியில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. பேச்சுவார்த்தை உண்மையா அல்லது அரசியல் தந்திரமா என்ற கேள்வி தற்போது சர்வதேச அளவில் விவாதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமைதி பேச்சுக்கு உடன்பட்டால்! ஈரான் தலைவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்! அமெரிக்கா அளிக்கும் ஆஃபர்!