நடுவானில் விமானத்தின் டயர் கழன்றதால் அதிர்ச்சி! பயணிகள் தலையில் விழுந்த மேற்கூரை! திக் திக் நிமிடங்கள்!
விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறுக்கான முழுமையான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமான விரிவான அறிக்கை இதுவரை வெளியாகவில்லை.
மஷாத்: ஈரானில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் டயர் தொடர்பான பிரச்னை ஏற்பட்டதால், விமானம் கடுமையாக அதிர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் அதிர்ந்ததில் கேபினின் உட்புற மேற்கூரைப் பகுதிகள் கழன்று விழுந்ததுடன், பயணிகள் தங்களது உடைமைகளுடன் பதற்றத்தில் சிக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மஷாத் நகரில் இருந்து கெர்மன்ஷா நோக்கி செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விமானத்தின் டயர் கழன்றதைத் தொடர்ந்து இன்ஜின் பகுதியில் பிரச்னை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக விமானத்தில் கடுமையான அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலைமையை உணர்ந்த விமானிகள், விமானத்தை தொடர்ந்து இயக்காமல் மீண்டும் மஷாத் விமான நிலையத்துக்கே திருப்ப முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது திடீர் தாக்குதல்! ஒருவர் பலி... 3 பேர் காயம்!
இதையடுத்து விமானம் பாதுகாப்பாக மஷாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. ஆனால், விமானம் கடுமையாக அதிர்ந்தபோது கேபினுக்குள் எதிர்பாராத காட்சிகள் அரங்கேறின.
விமானத்தின் உட்புற மேற்கூரைப் பகுதிகளில் சில கழன்று கீழே விழுந்தன. அதே நேரத்தில், பயணிகளின் உடைமைகள் வைக்கப்பட்டிருந்த மேல்புறப் பெட்டிகளும் திறந்துகொண்டன. அவற்றில் இருந்த பைகள் மற்றும் பொருட்கள் கீழே விழுந்ததால் பயணிகள் மத்தியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் பயணிகள் அல்லது விமான ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறுக்கான முழுமையான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமான விரிவான அறிக்கை இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே, விமானத்தின் உள்ளே மேற்கூரைப் பகுதிகள் சரிந்து விழும் காட்சிகள் மற்றும் பயணிகள் பதற்றத்துடன் காணப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த வீடியோக்களின் உண்மைத்தன்மை மற்றும் அவை எப்போது பதிவு செய்யப்பட்டவை என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாக வேண்டியுள்ளது.
விமானம் மீண்டும் விமான நிலையத்துக்கு பாதுகாப்பாக திரும்பியதால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறும், அதனால் கேபினுக்குள் ஏற்பட்ட சேதமும் விமானப் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
சம்பவம் தொடர்பாக விமான நிறுவனம் மற்றும் ஈரான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணையின் முடிவிலேயே, டயர் கழன்றதற்கான காரணம் மற்றும் விமானத்தின் மற்ற தொழில்நுட்ப பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் தெரியவரும்.
இதையும் படிங்க: “எரியுதுடி மாலா...” - ஈரானுக்கு இந்தியாவில் ரத்ன கம்பள வரவேற்பு... உச்சக்கட்ட வயிற்றெரிச்சலில் டிரம்ப்...!