ஏப்., 7ல் போர் நிறுத்தம்!! பேச்சுவார்த்தைக்கு சம்மதம்!! அமெரிக்க, இஸ்ரேல் போரில் இறங்கி வரும் ஈரான்!!
'மேற்கு ஆசியாவில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் நிபந்தனையுடன் கூடிய பேச்சுக்கு தயார்' என, பாக்., அரசு மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் செய்தி அனுப்பியதாக தகவல் வெளியாகிஉள்ளது.
மேற்காசியாவில் தொடரும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவுடன் நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அண்டை நாடான பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது போரைத் தொடங்கியது. போரை நிறுத்துவதற்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த நிலையில், பாகிஸ்தான் இந்தப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்து வருகிறது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்ததாவது: “அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஈரான் நிபந்தனை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. உடனடியாக அனைத்து தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என்பதற்கான உறுதியான உத்தரவாதம் தேவை” என்பதே ஈரானின் முக்கிய நிபந்தனைகள் என்று கூறினர்.
இதையும் படிங்க: சவுதி இளவரசர் ஒரு போர் வீரன்! புகழ்ந்து தள்ளும் ட்ரம்ப்!! ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்ப்பு! பாக்., மத்தியஸ்தம்!
இந்த ஏற்பாடுகள் பாகிஸ்தான் வழியாக முன்னெடுக்கப்படுகின்றன. சவுதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் இதில் பங்கேற்று அமெரிக்காவிடம் ஈரானின் கவலைகளை எடுத்துரைக்க உள்ளன. இஸ்லாமாபாத்தில் இந்த நான்கு நாடுகளின் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஈரான் முன்வைத்த நிபந்தனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைக்கான திட்டம் வகுக்கப்பட உள்ளது.
அமெரிக்காவிடமிருந்து உறுதியான உத்தரவாதம் கிடைத்தால் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போர் ஏற்கனவே ஈரானில் 2,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெறும் இந்த முயற்சி, பிராந்திய அமைதிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை ஈரான் ஏற்றுக்கொள்ளுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்த உச்சி மாநாட்டின் முடிவுகள் அடுத்த சில நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இஸ்ரேல் மீது ஏவுகணை மழை! ட்ரம்பை கேலி செய்யும் ஈரான்! அப்போ பேச்சுவார்த்தை சும்மாதானா?