நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க மாட்டோம்! அமெரிக்காவுக்கு ஈரான் சவால்!
ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியதை, ஈரான் நிராகரித்து உள்ளது.
ஹார்முஸ்: ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்கா முழு கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிய கருத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. அமெரிக்கா தனது நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறக்க முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், இதுவரை போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட கருத்து சர்வதேச அளவில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்கா தனது முழு கட்டுப்பாட்டை கொண்டிருப்பதாகவும், அந்த கட்டுப்பாட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளப்போவதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெஸாயி, அமெரிக்காவின் கூற்றை மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் டிரம்பின் ரகசிய பயணம்.. ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ பின்னணி என்ன?
அமெரிக்கா அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மீண்டும் திறக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஈரான் மீதான போர் மற்றும் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே ஈரானின் முக்கிய கோரிக்கையாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்றும், லெபனான் மற்றும் காசா உள்ளிட்ட பிராந்தியங்களில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஒன்றாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச அளவில் பெருமளவு எண்ணெய் மற்றும் எரிபொருள் வர்த்தகம் நடைபெறுகிறது. எனவே, இந்த நீர்வழி தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உருவாகும் எந்தவொரு மோதலும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுவது உண்மை நிலையை மாற்றாது என்றும் மொஹ்சென் ரெஸாயி தெரிவித்துள்ளார்.
டிரம்பின் கூற்றை ஈரான் நேரடியாக மறுத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எந்த திசையில் செல்லும் என்பது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் தொடர்ந்து நீடித்தால், அது போரின் போக்கை மட்டுமின்றி உலக நாடுகளின் எரிபொருள் விலையையும் பாதிக்கும் சூழல் உருவாகலாம்.
இதையும் படிங்க: டிரம்புக்கே இந்த நிலைமையா?! ஈரான் தாக்குதல் நடத்துமோ என அச்சம்! லாரியில் மறைந்து ரகசிய விமானத்தில் பயணம்!