ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய கட்டுப்பாடு! எதிரி நாடுகளுக்கு தடை! வணிக கப்பல்களுக்கு கட்டணம்!
ஈரானுடன் ஒத்துழைக்கும் நாடுகளின் வணிகக் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும், இதற்காக சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுப் போக்குவரத்துக்கு மிக முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், ஈரான் அரசு புதிய கடல்சார் வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் திரு. இப்ராஹிம் அசிசி இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் அதிரடி முடிவுகளைத் தெரிவித்துள்ளார் ஹார்முஸ் நீரிணைப் பாதையானது இனி ஈரானுடன் சுமுகமான உறவைப் பேணி, ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளின் வணிகக் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
தங்களது எல்லையைக் கடந்து செல்லும் வணிகக் கப்பல்களுக்குப் பிரத்யேக பாதுகாப்புச் சேவைகள் வழங்கப்படுவதாகக் கூறி, அதற்காகக் குறிப்பிட்ட தொகையை 'சர்வீஸ் கட்டணமாக' (Service Fees/Tolls) ஈரான் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: நீடிக்கும் பதற்றம்: முடிவுக்கு வருமா போர்..?? ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில் வரும்..!! நம்பிக்கையில் டிரம்ப்..!!
புதிய விதிகளின்படி, இந்த வழித்தடத்தைப் பயன்படுத்த விரும்பும் கப்பல்கள் தங்களது உரிமையாளர், காப்பீடு, ஊழியர்களின் குடியுரிமை மற்றும் ஏற்றிச் செல்லப்படும் சரக்குகள் குறித்த 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய படிவத்தை (Vessel Information Declaration) முன்கூட்டியே ஈரானின் பிரத்யேக கடல்சார் வாரியத்திற்கு (PGSA) அனுப்பி அனுமதி பெற வேண்டும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ள ஈரான், தங்களுக்கு எதிராகச் செயல்படும் எதிரி நாடுகள் மற்றும் அமெரிக்காவின் 'சுதந்திரக் கடல் வழித்தடத் திட்டத்தில்' (Freedom Project) பங்கேற்கும் நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்படும் எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த வழித்தடத்தில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. ஈரானின் இந்த அதிரடி கட்டுப்பாடுகளால் ஹார்முஸ் நீரிணை வழியேயான கப்பல் போக்குவரத்து சுமார் 95 சதவீதம் வரை சரிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் இந்த வழித்தடத்தின் மூலமே நடைபெறுவதால், ஈரானின் இந்தக் புதிய கட்டண விதிப்பு மற்றும் தடை உத்தரவு சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், விநியோகச் சங்கிலித் தடைக்கும் வழிவகுக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
அதே நேரத்தில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஈரான் அரசுடன் தொடர்ந்து தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “கண்ணில் படும் எந்தக் கப்பலையும் எரித்துவிடுங்கள்”... அமெரிக்கக் கடற்படைக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு...!