நீடிக்கும் பதற்றம்: முடிவுக்கு வருமா போர்..?? ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில் வரும்..!! நம்பிக்கையில் டிரம்ப்..!!
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் ஈரான் இன்னும் அதிக வேதனைப்பட வேண்டி இருக்கும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி முயற்சிகள் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் நடைபெற்ற கடற்படை மோதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது. முதல் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டப் பேச்சுகள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைத் தீர்க்க பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது.
அமெரிக்கா சார்பில் ஈரானுக்கு ஒரு விரிவான அமைதித் திட்டம் பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்டுள்ளது. ஈரான் அரசு இந்தத் திட்டத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் பொருளாதாரத் தடைகள் தளர்த்துதல், பாதுகாப்பு உத்தரவாதங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்க கடற்படையின் மூன்று போர்க் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்தபோது ஈரான் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்கக் கப்பல்கள் திறமையுடன் இத்தாக்குதலை முறியடித்தன. பின்னர் அமெரிக்கப் படைகள் ஈரானின் ராணுவத் தளங்கள் சிலவற்றின் மீது பதிலடித் தாக்குதல் நடத்தின. இந்த மோதலில் இரு தரப்பிலும் குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!
இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிருபருக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்தார். அதில், “அமெரிக்கா-ஈரான் கடற்படைகளுக்கு இடையிலான மோதல் ஒரு அன்பான சண்டைதான். போர் நிறுத்தம் இன்னும் நீடித்து வருகிறது. அமைதி ஒப்பந்தம் எந்த நேரத்திலும் கையெழுத்தாகலாம். ஈரான் தரப்பு இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தவறினால், அந்நாடு இன்னும் பெரிய வேதனையைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், ஈரானுடனான அமைதிப் பேச்சுகள் தொடர்பாக நம்பிக்கை தெரிவித்தார். “ஈரானிடமிருந்து இன்று இரவுக்குள் பதில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார். ஈரான் வேண்டுமென்றே பேச்சுகளைத் தாமதப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு, “விரைவில் தெரிந்துவிடும்” என்று சுருக்கமாக பதிலளித்தார்.
இரு நாடுகளும் தொடர்ந்து உரையாடல் மூலம் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சர்வதேச சமூகம் இந்தப் பதற்றம் விரைவில் தணிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஹார்முஸ் நீரிணை உலக எண்ணெய் வர்த்தகத்துக்கு மிக முக்கியமான பகுதி என்பதால், இந்த மோதல் உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!