ஒரு நாளைக்கு மட்டும் ரூ.7000 கோடி செலவு!! ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்! அதிகரிக்கும் செலவீனம்!
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தீவிர ராணுவ தாக்குதல்களால் அமெரிக்காவுக்கு ஏற்படும் செலவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ ஆய்வாளர்கள் மற்றும் பிரவுன் பல்கலைக்கழக ஆய்வறிக்கையின்படி, போர் முதல் நாள் மட்டும் அமெரிக்க ராணுவத்துக்கு 779 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 7,088 கோடி ரூபாய்) செலவானுள்ளது. போருக்கு முந்தைய ஏற்பாடுகளுக்காகவே 630 மில்லியன் டாலர் (5,733 கோடி ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ஜெரால்டு ஆர். போர்டு (Gerald R. Ford) இப்போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 6.5 மில்லியன் டாலர் (சுமார் 59 கோடி ரூபாய்) செலவாகிறது. போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், வீரர்கள் நிலை நிறுத்தம், எரிபொருள், உளவு விமானங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் இந்த செலவு ஏற்படுகிறது.
பிரவுன் பல்கலைக்கழக ஆய்வின்படி, 2023 அக்டோபர் முதல் 2025 வரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா 21.7 பில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்கியுள்ளது. ஏமன், ஈரான், மத்திய கிழக்கு செயல்பாடுகளுக்கு மேலும் 9.65 முதல் 12 பில்லியன் டாலர் வரை செலவிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு 31 முதல் 33 பில்லியன் டாலர் (சுமார் 2.8 லட்சம் கோடி ரூபாய்) செலவாகியுள்ளது.
இதையும் படிங்க: பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! குலை நடுங்கும் கொடிய ஆயுதங்கள்!
இப்போது ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்தால், குறைந்தபட்சம் 40 பில்லியன் டாலர் (3.67 லட்சம் கோடி ரூபாய்) முதல் அதிகபட்சம் 115 பில்லியன் டாலர் (10.57 லட்சம் கோடி ரூபாய்) வரை 2 மாதங்களுக்குள் செலவாகும் என போர் நிபுணர்கள் கணித்துள்ளனர். போர் நீடித்தால் 210 பில்லியன் டாலர் (19.30 லட்சம் கோடி ரூபாய்) வரை ஆகலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவின் 2025 ராணுவ பட்ஜெட் 850 பில்லியன் டாலர் (78 லட்சம் கோடி ரூபாய்) ஆகும். இதை ஒப்பிடுகையில், இந்தியாவின் 2025-26 ராணுவ பட்ஜெட் 81 பில்லியன் டாலர் (7.4 லட்சம் கோடி ரூபாய்) மட்டுமே. இந்த போர் செலவு அமெரிக்க பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும், எண்ணெய் விலை உயர்வு, உலக பணவீக்கம் ஆகியவற்றை தூண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த செலவு கணக்கீடுகள் உலக நாடுகளுக்கு பெரும் எச்சரிக்கையாக உள்ளது. போர் நீடித்தால் உலக பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. மத்திய கிழக்கில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!