இன்னும் 10 நாள் போர் நடந்தா அவ்வளவு தான்!! ஆயுதப்பற்றாக்குறை வரும்!! எச்சரிக்கும் பென்டகன்!
இன்னும் 10 நாட்களுக்கு போர் நீடித்தால் முக்கியமான ஏவுகணைகளின் கையிருப்பு தீர்ந்துவிடும் என்று பென்டகன் எச்சரித்துள்ளது.
வாஷிங்டன்: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் இன்னும் 10 நாட்களுக்கு நீடித்தால் அமெரிக்காவின் முக்கிய ஏவுகணை மற்றும் இடைமறிப்பு ஏவுகணைகளின் கையிருப்பு கடுமையாக குறைந்து தீர்ந்துவிடும் அபாயம் உள்ளதாக பென்டகன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது போரின் தீவிரத்தை வெளிப்படுத்தும் முக்கிய தகவலாக வெளியாகியுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' எனும் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உள்ளிட்ட முக்கிய இலக்குகள் அழிக்கப்பட்டன. ஈரான் பதிலடியாக ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை இஸ்ரேல், அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள சவுதி, கத்தார், குவைத் போன்ற வளைகுடா நாடுகள் மீது நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியா முழுவதும் போர் பதற்றம் உச்சத்தில் உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் ஒரு வாரத்தில் போர் முடியும் என கூறியிருந்தார். பின்னர் 4-5 வாரங்கள் வரை நீடிக்கலாம், தேவைப்பட்டால் அதற்கு மேலும் தொடரலாம் என அறிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய கிழக்கில் போர் பதற்றம்!! 9,000 பேர் நாடு திரும்பியாச்சு!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!!
ஆனால் பென்டகன் அதிகாரிகள் டிரம்பிடம், போர் இன்னும் 10 நாட்கள் நீடித்தால் SM-3, THAAD, பேட்ரியட் போன்ற இடைமறிப்பு ஏவுகணைகள் (interceptors) மற்றும் டொமஹாக் போன்ற தாக்குதல் ஏவுகணைகளின் கையிருப்பு கடுமையாக குறையும் என எச்சரித்துள்ளனர். உக்ரைன், இஸ்ரேல் பாதுகாப்புக்காக ஏற்கனவே பெரும் அளவு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒரு ஈரான் ஏவுகணையை தடுக்க பல இடைமறிப்பு ஏவுகணைகள் தேவைப்படுவதால், ஈரானின் தாக்குதல்கள் தொடர்ந்தால் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகள் பெரும் சவாலை எதிர்கொள்ளும். பென்டகன் அதிகாரிகள், போர் நீண்டால் முன்னெச்சரிக்கையாக ராணுவ தளங்களை பாதுகாக்க முடியாமல் போகலாம் என அஞ்சுகின்றனர்.
டிரம்ப் இதை மறுத்து, அமெரிக்காவிடம் "மிக அதிகமான" மற்றும் "கிட்டத்தட்ட வரம்பில்லாத" ஏவுகணை கையிருப்பு உள்ளது என கூறியுள்ளார். ஆனால் பல அதிகாரிகள், உற்பத்தி விகிதம் ஈரானின் ஏவுகணை உற்பத்தியை விட குறைவு என்பதால் நீண்ட போரில் சிரமம் ஏற்படும் என்கின்றனர்.
இந்த எச்சரிக்கை போரின் போக்கை மாற்றக்கூடியதாக உள்ளது. அமெரிக்கா விரைவில் ஈரானின் ஏவுகணை தளங்களை அழித்து முடிக்க முயல்கிறது. போர் தொடர்ந்தால் உலக பொருளாதாரம், எண்ணெய் விலை உயர்வு போன்றவை பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: இத்தனைக்கும் ஒபாமாதான் காரணம்! நான் மட்டும் இல்லைனா? 3 வருஷத்துக்கு முன்னாடியே போர் ஆரம்பிச்சிருக்கும்! ட்ரம்ப் காட்டம்!!