×
 

சவுதிக்கு பாதுகாப்பு கிடைக்காது! பாகிஸ்தான்-துருக்கி ஒப்பந்தம் குறித்து ஈரான் அதிரடி எச்சரிக்கை!

துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கு பாதுகாப்பை தராது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய 3 நாடுகளும் இணைந்து மேற்கொண்டுள்ள புதிய கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சவுதி அரேபியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் சபா அரண்மனையில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பின்போது, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்’ என அழைக்கப்படும் இந்த உடன்படிக்கையின் முக்கிய அம்சமாக, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், மற்ற இரு நாடுகள் மீதான தாக்குதலாகவும் கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உள்ளன.

இதையும் படிங்க: ஈரான் மக்களை கொல்ல விரும்பவில்லை! போர் ரத்து... ஒப்பந்தம் ஓகே? டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

எண்ணெய் வளத்தில் முக்கிய நாடாக விளங்கும் சவுதி அரேபியா, அணு ஆயுத திறன் கொண்ட பாகிஸ்தான் மற்றும் நேட்டோவில் முக்கியமான ராணுவ சக்தியாக உள்ள துருக்கி ஆகியவை ஒரே பாதுகாப்பு கட்டமைப்பில் இணைவது மேற்காசியாவின் புவிசார் அரசியலில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெசாயி, சவுதி அரேபியாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவுக்கு பல ஆண்டுகளாக ஆதரவு அளித்தபோதும் எதிர்பார்த்த பாதுகாப்பு கிடைக்காததைப் போலவே, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்தமும் சவுதிக்கு உண்மையான பாதுகாப்பை வழங்காது என தெரிவித்துள்ளார்.

மேலும், பிற நாடுகளிடம் பாதுகாப்பை நாட வேண்டிய நிலை ஏற்படாத வகையில் சவுதி அரேபியா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் இந்த கருத்து, சவுதி-பாகிஸ்தான்-துருக்கி பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து தெஹ்ரானின் கவலை அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக மேற்காசியாவில் ஏற்கனவே நிலவி வரும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றத்திற்கு மத்தியில், இந்த புதிய பாதுகாப்பு கூட்டணி எதிர்காலத்தில் பிராந்திய அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்கப்படுகிறது.

ஒருபுறம் சவுதி அரேபியா தனது பாதுகாப்பை வலுப்படுத்த புதிய கூட்டாளிகளை உருவாக்கி வரும் நிலையில், மறுபுறம் ஈரான் இந்த நடவடிக்கையை சந்தேகத்துடன் பார்க்கிறது. இதனால் மேற்காசியாவில் உருவாகி வரும் புதிய கூட்டணிகள் பிராந்திய சக்திகளுக்கு இடையிலான போட்டியை மேலும் தீவிரப்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: டிரம்ப் கூறியது பொய்... ஹார்முஸ் ஜலசந்தி திறக்க எந்த ஒப்பந்தமும் இல்லை; அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share