இஸ்ரேல் அதிரடி தாக்குதல்! ஈரானின் பாசிஜ் படை தளபதி சுலைமானி கொல்லப்பட்டதாக அறிவிப்பு!
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28 முதல் போர் மூண்டுள்ள நிலையில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் தன்னார்வ துணை ராணுவப் படையான 'பாசிஜ்' அமைப்பின் தளபதி குலாம்ரெசா சுலைமானி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாகப் பாசிஜ் படையின் தலைமைப் பொறுப்பில் இருந்த இவர், இஸ்ரேலிய உளவுத்துறையின் துல்லியமான தகவலின் அடிப்படையில் இலக்கு வைக்கப்பட்டார்.
தெஹ்ரானில் பாசிஜ் படையினருக்காகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு கூடார முகாமைக் குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை இந்தத் தாக்குதலை நடத்தியது. ஏற்கனவே தங்களது தலைமையகங்கள் தாக்கப்பட்டதால், நடமாட்டத்தை மறைக்கப் பயன்படுத்தப்பட்ட இந்த ரகசிய இடத்தில்தான் சுலைமானி தங்கியிருந்தார். இந்தத் தாக்குதலில் சுலைமானியுடன் அவரது துணைத் தளபதி செய்யது கரிஷி (Seyyed Karishi) மற்றும் பாசிஜ் அமைப்பைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
1982 முதல் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையில் (IRGC) பணியாற்றி வரும் இவர், 2019-ஆம் ஆண்டு பாசிஜ் படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஈரானில் நடைபெறும் உள்நாட்டுப் போராட்டங்களை ஒடுக்குவதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதிலும் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இவர் மீது ஏற்கனவே பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இதையும் படிங்க: எதிரிகளுக்கு இடமில்லை! ஹார்மூஸ் ஜலசந்தி குறித்து ஈரானின் அதிரடி திட்டவட்டம்!
சுலைமானி கொல்லப்பட்ட அதே நேரத்தில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானியும் (Ali Larijani) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் ராணுவக் கட்டமைப்பைச் சிதைக்க இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளில் இது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரான் தலைநகரில் பரபரப்பு! அரசு ஆதரவு பேரணியின்போது பயங்கர குண்டுவெடிப்பு!