ஹெஸ்பொல்லாவை கட்டுப்படுத்துங்க! இல்லைனா லெபனான் பேரழிவை சந்திக்கும்!! இஸ்ரேல் வார்னிங்!
ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா அமைப்பை லெபனான் கட்டப்படுத்த தவறினால், பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெய்ரூட், மார்ச் 9: மேற்காசியாவில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பை கட்டுப்படுத்தாவிட்டால் பெரும் பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதை தெளிவாக தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான பெரிய தாக்குதலை நடத்தியதில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடங்கியது.
ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது தீவிர தாக்குதல்களை மேற்கொண்டது. கடந்த வாரத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நாட்டை விட்டு வெளியேறினர்.
இதையும் படிங்க: ஈரான் -இஸ்ரேல் , அமெரிக்கா போர்! மேற்காசியாவில் நிலவரம் என்ன? பார்லி.,யில் ஜெய்சங்கர் விளக்கம்!
பெய்ரூட்டின் தெற்கு புறநகரங்கள், ஹெஸ்பொல்லாவின் கோட்டையாக கருதப்படும் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் முக்கிய கட்டடங்கள் சேதமடைந்தன. நபி சிட் போன்ற இடங்களில் குண்டுவீச்சால் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைக்காட்சி உரையில், "ஹெஸ்பொல்லா எங்கள் நாட்டின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. 2024 ஒப்பந்தப்படி ஹெஸ்பொல்லாவை நிராயுதபாணியாக்குவது லெபனான் அரசின் பொறுப்பு.
அவ்வாறு செய்யாவிட்டால் ஹெஸ்பொல்லாவின் ஆக்கிரமிப்பால் லெபனான் பேரழிவுகளை சந்திக்கும். உங்கள் தலைவிதி உங்கள் கைகளில் உள்ளது. எங்கள் மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்று எச்சரித்தார்.
இதேபோல், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் உள்ள ஈரானிய பிரதிநிதிகள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்தது. இதையடுத்து, ஈரான் தூதர்கள், அவர்களின் குடும்பத்தினர் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் லெபனானை விட்டு வெளியேறினர். ரஷ்ய விமானம் மூலம் அவர்கள் புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ராணுவம் ஈரான் தூதரகத்துக்கு அருகில் தாக்குதல் நடத்தியதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
லெபனான் அரசு ஹெஸ்பொல்லாவை கட்டுப்படுத்த முடியாவிட்டால், போர் மேலும் விரிவடையும் அபாயம் உள்ளது. ஏற்கனவே லெபனானில் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேலின் எச்சரிக்கை மேற்காசிய பதட்டத்தை இன்னும் அதிகரித்துள்ளது. ஹெஸ்பொல்லா தாக்குதல்களை தொடர்ந்தால் இஸ்ரேல் பெரிய அளவிலான தரைப்படை நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில் லெபனான் அரசு மற்றும் சர்வதேச சமூகம் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. போர் தொடர்ந்தால் லெபனான் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: கமேனியின் அஞ்சலிக்கும் சிக்கல்!! ஓயாத தாக்குதல்!! இறுதி சடங்கை ஒத்திவைத்தது ஈரான்!!