சனே தகைச்சிக்கு சூப்பர் மெஜாரிட்டி வெற்றி! ஜப்பான் வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவம்!
பார்லிமென்ட்டில் அனைத்து குழுக்களையும் கட்டுப்படுத்தும் முழு அதிகாரத்தையும் சனே தகாய்ச்சியின் எல்டிபி தலைமையிலான கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.
ஜப்பான் நாட்டில் பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டி (LDP) கூட்டணி, சமீபத்தில் நடந்த ஸ்னாப் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது ஜப்பான் அரசியலில் மிகப் பெரிய திருப்பமாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் LDP கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சனே தகைச்சி, ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார். இது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாகும். சீனாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து, தேசிய பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்ட கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் அவரது செயல்பாடுகளை பாராட்டியுள்ளனர்.
தனது கொள்கைகளுக்கு வலுவான மக்கள் ஆதரவை நிரூபிக்கும் வகையில், பார்லிமென்ட்டை கலைத்து ஸ்னாப் தேர்தலை அறிவித்தார். 465 இடங்கள் கொண்ட கீழவை (House of Representatives) தேர்தலில், பெரும்பான்மைக்கு 233 இடங்கள் தேவை.
இதையும் படிங்க: பாஜக பொதுச்செயலாளர் காரை அடித்து நொறுக்கிய போதை கும்பல்! கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்!
ஆனால் LDP கட்சி தனியாகவே 316 இடங்களை கைப்பற்றியது. கூட்டணி கூட்டாளியான ஜப்பான் இன்னோவேஷன் பார்ட்டியுடன் சேர்த்து 352 இடங்கள் கிடைத்துள்ளன. இது இரண்டு மூன்று பங்கு சூப்பர் மெஜாரிட்டியாகும்.
இதனால் கீழவை மட்டுமின்றி, மேலவையிலும் ஆளும் கூட்டணிக்கு வலுவான பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஜப்பான் வரலாற்றில் போஸ்ட்-வார் காலத்தில் ஒரு கட்சி அல்லது கூட்டணி பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். LDP-யின் இந்த சாதனை 1955-ல் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
தேர்தல் வெற்றியால் பிரதமர் தகைச்சியின் ஆட்சி மிகவும் வலுப்பெற்றுள்ளது. அவரது கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றி சீனாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு, பொருளாதார சீர்திருத்தங்கள், பாதுகாப்பு கொள்கைகளை துரிதப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜப்பான் பங்குச் சந்தை ரெக்கார்ட் உயர்வை கண்டது. உலக நாடுகள் தகைச்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்த வெற்றி ஜப்பானின் அரசியல், பொருளாதார, வெளியுறவு கொள்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை? எங்களுக்கு எந்த சம்மதமும் இல்ல... போலீசை கைகாட்டிய கிரிக்கெட் வாரியம்..!