பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை! ஜோர்டான் மன்னருடன் ஒரே காரில் பயணம்!
ஜோர்டான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு டிசம்பர் 15 முதல் 18 வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் முதல் கட்டமாக டிசம்பர் 15-ஆம் தேதி ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன் பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அல் ஹுசைனியா அரண்மனையில் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனுடன் பிரதமர் மோடி ஒருமணி நேரம் தனிப்பட்ட சந்திப்பு நடத்தினார். அதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு தலைவர்களும் இந்தியா-ஜோர்டான் உறவுகளை முழுமையாக ஆய்வு செய்தனர். பயங்கரவாத எதிர்ப்பு, பிராந்திய அமைதி, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்தியாவும் ஜோர்டானும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரே நிலைப்பாடு கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: இது மோடி பொங்கல்! தமிழ்நாடு விசிட் கன்ஃபார்ம்! அடுத்தடுத்து அமித் ஷா போட்டு வைத்த மாஸ்டர் ப்ளான்!
டிசம்பர் 16-ஆம் தேதி (இன்று) ஜோர்டான் கிரவுன் பிரின்ஸ் அல் ஹுசைன் பின் அப்துல்லா II, பிரதமர் மோடியை தானே கார் ஓட்டி ஜோர்டான் அரச அருங்காட்சியகமான 'தி ஜோர்டான் மியூசியம்'க்கு அழைத்துச் சென்றார். இது இரு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய நட்பை வெளிப்படுத்தும் அரிய சைகையாக உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளன.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜோர்டான் அருங்காட்சியகத்துக்கு செல்லும் வழியில் கிரவுன் பிரின்ஸ் அல் ஹுசைன் பின் அப்துல்லா II உடன்” என்று புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர்வள மேலாண்மை, பெட்ரா-எல்லோரா இணைப்பு ஒப்பந்தம், கலாச்சார பரிமாற்ற திட்டம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தியா-ஜோர்டான் உறவு 75 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் இந்த சுற்றுப்பயணம் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை அனுமதித்தால், கிரவுன் பிரின்ஸுடன் பிரதமர் மோடி பண்டைய நகரமான பெட்ராவையும் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுடன் பெட்ராவுக்கு பழங்கால வணிக தொடர்புகள் உள்ளன.
ஜோர்டான் பயணத்தைத் தொடர்ந்து எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
இதையும் படிங்க: புட்டபர்த்தியில் கிடைத்த அனுபவம்!! ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா! பிரதமர் மோடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!!