×
 
☰

தொடரும் கனமழை... கொடைக்கானலில் நேர்ந்த பயங்கரம்... தப்பித் தவறிக்கூட போய்டாதீங்க மக்களே...!!

கனமழை காரணமாக கொடைக்கானல் – பழனி சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கொடைக்கானலில் பல்வேறு இயற்கை இடர்பாடுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று இரவும் மழையின் தாக்கம் சற்றும் குறையாமல், கொடைக்கானலின் மையப் பகுதியில் சுமார் 10 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் ஆங்காங்கே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கொடைக்கானலில் இருந்து பழனிக்குச் செல்லும் பிரதான சாலையில், பி.எல். செட் என்ற பகுதியில் தற்போது மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்துள்ளது.

இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல வேண்டாம்! கனமழையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

இதன் காரணமாக, சாலைக்கு மேலே உள்ள பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகளும் கற்களும் உருண்டு சாலையில் விழுந்துள்ளன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவு 10 மணிக்குப் பிறகு அந்தப் பகுதியில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 7 மணி முதல் போக்குவரத்து தொடங்கியிருந்தது. தற்போது மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தடையால் கொடைக்கானலில் இருந்து பழனிக்கு வந்த உள்ளூர் மக்களும், வெளியூர்களில் இருந்து கொடைக்கானலுக்குச் செல்ல வந்த சுற்றுலாப் பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மலைச்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், ஏராளமான வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களைச் சாலையோரம் நிறுத்திவிட்டு இரவு முழுவதும் காத்திருந்து வருகின்றனர்.

குறிப்பாக, பழனி வழியாகக் கொடைக்கானலுக்குச் செல்ல முடியாததால், சுமார் 100 கிலோ மீட்டர் கூடுதல் தூரம் பயணித்து வத்தலகுண்டு வழியாகக் கொடைக்கானலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் நேர விரயமும், கூடுதல் எரிபொருள் செலவும் ஏற்படுவதாகக் கூறும் வாகன ஓட்டிகள், மலைச்சாலையில் விழுந்துள்ள மரங்கள் மற்றும் மண்சரிவுகளை விரைந்து அகற்றி, சாலையைச் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் முதற்கட்டமாகக் கார் உள்ளிட்ட சிறிய வாகனங்களையாவது இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் மழையால் பழனி–கொடைக்கானல் மலைச்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், இரவு முழுவதும் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், கொடைக்கானலில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: "இனி நோ டென்ஷன்"..! கொடைக்கானலில் மல்டி லெவல் கார் பார்க்கிங்..! தமிழக அரசு திட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share