×
 

அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

$2.7 ட்ரில்லியன் ஆயுதங்களுக்காகச் செலவிடப்படுகிறது; ஆனால் 630 மில்லியன் மக்கள் பசியால் வாடுகின்றனர் பிரேசில் அதிபர் லூலா தா சில்வா ஆதங்கம்.

உலக நாடுகளின் தலைவர்கள் அமைதி மற்றும் சுற்றுச்சூழல் குறித்துப் பேசிக்கொண்டே, மறுபுறம் போர்களுக்காகவும் ஆயுதங்களுக்காகவும் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிடுவது குறித்துப் பிரேசில் அதிபர் லூலா தா சில்வா (Lula da Silva) தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

உலக நாடுகளின் முன்னுரிமை தவறாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டிய அவர் கடந்த ஆண்டில் மட்டும் உலகளவில் ஆயுதங்கள் மற்றும் போர்களுக்காகச் சுமார் $2.7 ட்ரில்லியன் (2.7 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்) செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையைப் உலகில் பசியால் வாடும் 630 மில்லியன் மக்களுக்குப் பகிர்ந்தளித்தால், ஒவ்வொருவருக்கும் தலா $4,285 (சுமார் ₹3.5 லட்சம்) வழங்க முடியும். இதன் மூலம் உலகிலிருந்தே பட்டினியை முழுமையாக ஒழிக்க முடியும் என அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நாட்டின் ராணுவ பலத்தைப் பற்றி அடிக்கடி பெருமை பேசுவதை லூலா விமர்சித்தார். ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும்போது 'என்னிடம் பெரிய கப்பல் உள்ளது, பெரிய ராணுவம் உள்ளது' என்று போர்களை அறிவிக்கும் அதிபருடன் நம்மால் வாழ முடியாது. என்னிடம் உலகின் மிகப்பெரிய உற்பத்தித் திறன் உள்ளது என்று சொல்வதுதானே ஒரு தலைவருக்கு அழகு? போர்களைப் பற்றி கவலைப்படுபவர்கள் பசியைப் பற்றி கவலைப்படுவதில்லை" எனச் சாடினார்.

இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

பூமியைப் பாதுகாப்பது பற்றிப் பேசிக்கொண்டே போர்களில் ஈடுபடுவது முரண்பாடானது என அவர் குறிப்பிட்டார். கார்பன் உமிழ்வைக் குறைப்பது பற்றிப் பேசிக்கொண்டே உக்ரைன் போன்ற போர்களில் ஈடுபடுவதால், மீண்டும் நிலக்கரி சுரங்கங்கள் திறக்கப்படுகின்றன. இது பல ஆண்டுகாலச் சுற்றுச்சூழல் முயற்சிகளைப் பாழ்படுத்துகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகச் செலவிடப்படும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக ஆயுதங்களுக்காகச் செலவிடுவது, நம்மை 'காலநிலை பேரழிவிற்கு' (Climate Apocalypse) அழைத்துச் செல்லும் என எச்சரித்தார்.

உலக நலனை விட ஆயுதங்களை அதிகரிப்பதிலேயே ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் குறியாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். நிஜமான போர் என்பது பட்டினிக்கும் சமத்துவமின்மைக்கும் எதிராகத்தான் இருக்க வேண்டும் என்பது லூலாவின் ஆணித்தரமான கருத்தாக இருந்தது.

உலக அளவில் நிலவி வரும் பொருளாதார மற்றும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பிரேசில் அதிபரின் இந்தப் பேச்சு வளர்ந்து வரும் நாடுகளின் (Global South) குரலாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share