கண்டுபிடித்தால் ₹583 கோடி! 227 பயணிகளின் நிலை என்ன? மாயமான MH370-ஐக் கண்டுபிடிக்க மீண்டும் தீவிரம் - மலேசியா அரசின் இறுதி முயற்சி!
11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணியை மலேசியா மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, நடுவானில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணியை மீண்டும் தொடங்க இருப்பதாக மலேசியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்தக் கூட்டுத் தேடுதல் பணி டிசம்பர் 30-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
கடந்த 2014, மார்ச் 8 அன்று, 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட MH370 விமானம், திடீரென ரேடாரில் இருந்து மறைந்தது.
விமானம் அந்தமான் கடலின் மேல் திரும்பிப் பயணித்திருக்கலாம் என்ற கோணத்திலும் மலேசிய விமானப்படை ஆய்வு செய்தது. இந்தக் கூட்டுத் தேடுதல் பணியில் சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்படப் பல நாடுகள் பங்கேற்றன.
இதையும் படிங்க: 16 வருட கூகுள் அனுபவம்! ஆப்பிள் நிறுவனத்தின் AI பிரிவு தலைமைப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சுப்ரமண்யா!
பல கட்டத் தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு, மலேசியப் போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் தேடுதல் பணியைத் தொடங்க முடிவெடுத்துள்ளது. கடல்சார் ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி (Ocean Infinity) இந்தத் தேடுதல் பணியை மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது.
இந்தத் தேடலும், கடைசியாக மார்ச் 2025-இல் நடந்தது போல, "கண்டுபிடித்தால் மட்டுமே கட்டணம்" (no find, no fee) என்ற நிபந்தனையின் அடிப்படையில் நடைபெறும். தேடலின்போது முக்கியமான உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டால், மலேசியா ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்திற்கு $70 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில், சுமார் ₹583 கோடி செலுத்தும் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாயமான விமானத்தின் பயணித்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஒரு முடிவைத் தேடித் தருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'விமானத்திற்கு என்ன நடந்தது, அது ஏன் காணாமல் போனது என்பதைக் கண்டறிவது' இதன் முக்கிய இலக்காகும். 2015-இல் பிரெஞ்சு தீவான ரீயூனியனில் (Réunion) விமானத்தின் வலது இறக்கையின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பிறகுதான் தேடுதல் பணிகள் விரிவாக்கப்பட்டன. தற்போது தொடங்கும் தேடலின் போது, விமானம் வேண்டுமென்றே வேறு பாதைக்குத் திருப்பிச் செல்லப்பட்டதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓசூர் விமான நிலையக் கனவு தவிடுபொடி! ஏன் இந்த முடிவை எடுத்தோம்? - மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை விளக்கம்!